states

img

இண்டம்துருத்திமனையில் காந்தி சந்தித்த தீண்டாமை

வைக்கம் சத்தியாகிரக வரலாற்றில் இண்டம்துரத்தி மனைக்கு சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது. தீண்டாமை காரணமாக காந்தியைக் கூட ஒதுக்கிவைத்த வீட்டின் பெயர்தான் இண்டம்துருத்தி மனை. பின்னாளில் மரம் ஏறுவோருக்கான  தொழிலாளர் சங்க அலுவலகமாக மாறியதும் கேரளாவின் சமூக முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியது. 603 நாட்கள் நீடித்த வைக்கம் சத்தியாகிரகம் மார்ச் 30, 1924 அன்று தொடங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதே அரசின் முயற்சி. சத்தியாக்கிரகத்தை எதிர்த்தவர்களில் முன்னணியில் இருந்தவர் வைக்கத்தில் உள்ள  இண்டம்துருத்தி மனையைச் சேர்ந்த நீலகண்டன் நம்பூதிரி. வைக்கத்தில் உள்ள புகழ்பெற்ற நிலப்பிரபுத்துவ குடும்பம் இண்டம்துருத்திமனை. சேருமேல் ஜனம் எனப்படும் 48 பிராமண இல்லங்களின் மீதான மேலாண்மை இந்த மனைக்கு உண்டு. அப்போது வைக்கம் கோவிலின் மேலாண்மை யும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததால் நம்பூதிரி என்ன கட்டளையிட்டாலும் அது வேத வாக்கியம். அன்று வைக்கத்தில் அஷ்டமி  கொடியேற்ற, இண்டம்துருத்தி மனைக்கு முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டும். 1925 மார்ச் 9அன்று காந்திஜி சத்தியா கிரகத்தில் பங்கேற்பதற்காக வைக்கம் படகுத் த்துறையில் வந்து இறங்கினார்.

சத்தியாக்கிர கத்தை எதிர்த்த சவர்ண சமூகத்தினரின் தலைமை நீலகண்டன் நம்பூதிரி என்பதை உணர்ந்த காந்திஜி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். மறுநாள் மனையை சென்றடைந்தார். மகன் ராம்தாஸ் காந்தி, சி. ராஜகோபாலாச்சாரி, மகாதேவ் தேசாய், டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர், திவான் பேஷ்கர் எம்.வி. சுப்ரமணிய ஐயர், தேவசம் உதவி  ஆணையர் பி.விஸ்வநாத அய்யர், தாசில்தார் சுப்ரமணிய அய்யர் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் காந்தி வைசியர் என்பதால் மனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தனியாக இதற்கென கட்டப்பட்ட தாழ்வாரத்தில் அமர்ந்து, நம்பூதிரியுடன் நீண்ட நேரம் பேசி னார். சத்தியாக்கிரகிகளின் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றாலும், நம்பூதிரியின் மனதை மாற்ற காந்தியால் முடிந்தது. பின்னர், நிலச் சீர்திருத்தம் இண்டம்துருத்தி மனையை பொருளாதார நெருக்கடியில் தள்ளியது. கடைசியில் மனையை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் இரண்டு ஏக்கர் நிலத்துடன் இண்டம்துருத்தி மனை இல்லத்தை ஏஐடியுசி தலைமையிலான ‘செத்து (மரம் ஏறுவோர்)’ தொழிலாளர்கள் சங்கம்’ வாங்கியது. அதன் மூலம் காந்தியடிகளைக் கூட ஒதுக்கி வைத்த மனை, செத்து தொழிலாளர்களின் அலுவலகமாக மாறியது வரலாறு எழுதிய கவித்துவ நீதியாகிவிட்டது.

;