states

img

உண்மைக்கு தோள்கொடுப்பதே நாங்கள் செய்துகொண்ட உடன்பாடு சு. வெங்கடேசன் எம். பி.,

உழவர் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய நள்ளிரவில் அவைக்குள் ஏறிய உஷ்ணம் நாடெங்கும் பரவியது நாம் கண்டது தான்.  சட்டத்தை முன்மொழிந்தவர்கள் அவர்களின் பதவி விலகலையும் சேர்த்து முன்மொழிந்ததுதான் நாம் நாடெங்கும் பார்த்த ஆவேசப் போரின் முன்னோட்டம். அப்போது மக்கள் விரோதச் சட்டங்கள் எவற்றையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிட மாட்டோம் என உரத்துக் குரல் கொடுத்தோம். மாநிலங்களவையில் எங்கள் சகாக்கள் அவர்களோடு நேருக்கு நேர் நின்றார்கள். நேரே நிற்பவர்களை அவர்களுக்கு எப்போதும் பிடிக்காது. பொய்க்குற்றச்சாட்டுகளில் வெளியேற்றி இடைநீக்கம் செய்தார்கள். அதற்கடுத்த நாட்களின் இரவுகள் நாடாளுமன்ற வளாகம் போர்க்கோலமானது. சொன்ன நாளுக்கு முன்பே அவையை முடித்துக் கொண்டு ஓடினார்கள். 

அவையை முடித்து ஓடியவர்களின் வழிகளை, சிங்கு எல்லை உட்பட எல்லா எல்லைகளையும் மறித்து நிறுத்தியது உழவர் கூட்டம். நெருப்பு பற்றி விட்டால் நிறுத்தமுடியுமா? உழுது அழுத்தவர்களின் உற்ற தோழர்களாக உடன்பட்டு நின்றோம். எல்லையில்லாத ஏளனங்களையும், ஆயிரக்கணக்கான அவதூறுகளையும், நூற்றுக்கணக்கான உயிர்ப்பலியையும் சந்தித்த பின்னும் உறுதியோடு நின்றது உழவர் கூட்டம். வருடம் ஒன்றானது. 

அதற்கு பின்னான அரசியல் நிகழ்வுகள் ஒன்றிய அரசினை அஞ்ச வைக்கும் மாற்றங்களை கொடுத்தது. பதைபதைத்த நெஞ்சங்களையும் நம்பிக்கை கொண்டு உழுதது இந்திய உழவர் கூட்டம். உரமிக்க போராட்டமும் , தீர்க்கமான முடிவுகளும்  ஒன்றிய அரசு உழவர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வைத்தது.  அதன் சட்ட வரைவினை ஒப்புதலுக்கு உள்ளாக்கும் இந்த கூட்டத்தொடரில் விவாதமே இன்றி தெறித்து ஓடியது ஒன்றிய அரசு. இப்போதும் நேருக்கு நேராய் சமர் புரிந்து கொண்டிருக்கிறோம். சட்டத்தை திரும்பப்பெற்று சனநாயகக் கண்ணீர் வடித்தவர்கள் அதற்காய் போராடிய எங்கள் சகாக்களை மீண்டும் இடைநீக்கம் செய்துள்ளனர்.  

வீதிகளின் முழக்கம் ஓயப்போவதில்லை. இந்த வீணர்களுக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓய்ந்து விடுவதில்லை. போரின் போது நம் நிலையை தெரிவிப்பதே நலம்.  இது உண்மைகளுக்கு ஆதரவான போர். 75 ஆண்டு ஜனநாயக மரபையும், சுதந்திரத்தையும் காக்கும் போர். 

இன்றைய இரவிலும் உயிர்த்துக் கொண்டிருக்கிறது எங்கள் சகாக்களின் போராட்டம். உண்மையின் உடனிருப்பதே நாங்கள் செய்துகொண்ட உடன்பாடு. உண்மையின் உடன் இருப்பதே அறம்.  ஓராண்டாய் இந்தியச் சாலைகளில் போராடிய உழவர் கூட்டத்தோடு ஒன்றாயிருந்தோம். இன்று அதற்காய் போராடி பழிவாங்கப்பட்டிருக்கும் எங்கள் சகாக்களோடு உடனிருக்கிறோம்.  நாடாளுமன்ற வளாகத்தில் விடாது முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தின் போது இந்திய விடுதலையின் வீர நட்சத்திரம் மாவீரன் பகத்சிங் கூறியது நினைவிற்கு வருகிறது. ஆம் “ இந்தப் போர் எங்களால் துவங்கப்படவுமில்லை ; எங்களோடு முடியப் போவதுமில்லை”.

;