புதுதில்லி, மே 21- பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல்மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்தது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் சர்வதேச விவகாரங்கள் என சாக்குபோக்கு கூறி ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் டிராவல் நிறு வனம் நடத்தி வருவோரும் அரசு போக்கு வரத்து கழகங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. டீசல் விலை உயர்வால் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. காய்கறிகள், பழங்கள், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். சரக்கு போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்தன. பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலி யுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. தமிழகத்திலும் ஒருவார கால போராட்டம் நடத்த இக்கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறை யும்'' என நிதியமைச்சர் நிர்மலா சீதா ரமான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரி குறைப்பால் ஒன்றிய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.