states

தொடர்பிலிருந்தவர்கள் 482 பேருக்கு சோதனை; தேவையற்ற பீதி வேண்டாம்

புதுதில்லி, டிச.3- பெங்களூரில் உருமாறிய கொரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் வைரசால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. உலக  அளவில் 33 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மி, இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது  இதையடுத்து இருவருடனும் முதல்கட்ட, இரண்டாம் கட்ட சோதனையிலிருந்த 482 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட இருவரில் 66 வயதான ஆண் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். 46 வயதான மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த பயணி நவ. 20-அன்று பெங்களூருக்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டதில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து, அவரது மாதிரி மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வியாழக்கிழமை கிடைத்தது. அதில், அவர் ஒமைக்ரான் தீநுண்மி யால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டார்.

மற்றொரு ஆய்வுக் கூடத்தில் இவரது மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி நவ. 27-அன்று அவர் துபாய் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவரோடு முதல்கட்டத் தொடர்பில் இருந்த 24 பேர், இரண்டாம்கட்டத் தொடர்பில் இருந்த 240 பேருக்கு கொரோனா சோதனை செய்ததில், எவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டா வது  நபர் 46 வயதான ஆண், பெங்களூரைச் சோ்ந்தவா். இவரிடம் நவ. 22 அன்று மாதிரி சேகரித்து, சோதித்ததில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. அவரது நுரையீரலில் தொற்று அதிகம் காணப்பட்டதால், அவரது மாதிரி தேசிய உயிரி அறிவியல் கவுன்சி லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப் பட்ட சோதனையில் அவா் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில் வீட்டுத்தனிமையில் வைக்கப் பட்டிருந்த இவா், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவரோடு முதல் தொடா்பில் இருந்த 13 பேர், இரண்டாம் தொடா்பில் இருந்த 205 பேரிடமும்  சோதனை நடத்தப்பட்டது. அதில், முதல் தொடர்பில் இருந்த மூன்று பேர், இரண்டாம் தொடர்பில் இருந்த இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது. இவர்கள் ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்ளது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பன்னாட்டுப் பயணிகள் மற்றும் நுரையீரலில் தொற்று அதிகம் காணப்படுவோரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளின் முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.  தென் ஆப்பிரிக்க மருத்துவா்களின் கருத்துப்படி, இது எளிதில் பரவும், ஆனால் தீவிரம் குறைந்ததாக இருக்கும். உயிருக்கு ஆபத்து இருக்காது  என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தேவையற்ற பீதி

இந்தியாவில் ஓமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு  தில்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் தலைவர் அசோக் சேத், தனது ட்வீட்டில், “இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து  ஏன் பீதியும் பயமும் உள்ளது? ஒமைக்ரான் குறித்து போதுமான தரவுகளை மதிப்பீடு செய்வதற்கு முன்பே இது மிகவும் பயங்கர மான விஷயமாக மாறியது துரதிர்ஷ்டவசமானது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் இது லேசான நோயை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். இரண்டு முகக்கவசம், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒமைக்ரான் தொற்றி லிருந்து நம்மைப் பாதுகாக்கும். சுறுசுறுப்பாக இருங்கள்; ஆனால் பீதி அடைய வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

18 மாவட்டங்களில்...

இதற்கிடையில், இந்தியாவில் 18 மாவட்டங் களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கொரோனா தொற்று பதிவாகலாம் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கேரளத்தில் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், பாலக்காடு, பத்தனம்திட்டா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பரவல் அதிகம் பதிவாகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

 டிசம்பர் 2 நிலவரப்படி 79.16 கோடி பேர் (வயது வந்தோரில் 84.3 சதவீதம்) இதுவரை  தடுப்பூசி யின் முதல் தவணையையும் 45.92 கோடி பேர்  (வயது வந்த மக்கள் தொகையில் 49 சதவீதம்) இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

வெளிநாட்டினரைத் தேடும் ஆந்திரம்

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள, வெளிநாட்டிலிருந்து திரும்பிய 60 பேரில், 30 பேரை  ஆந்திரப்பிரதேச அரசு தேடிக் கொண்டிருக்கிறது.  கடந்த பத்து  நாட்களில்,  ஆப்பிரிக்காவிலிருந்து ஒன்பது பேர் உள்பட பல்வேறு வெளிநாடுகளி லிருந்து, 60 பேர் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்தனர். அவர்களில் 30 பேர் விசாகப்பட்டினத்தில் தங்கியுள்ளனர். ஆனால், மற்ற 30 பேர் மாநி லத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் அவர் களின் சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்களில் பலரும், சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளும்  தொலைபேசி அழைப்புகளை எடுக்காததால், சுமார் 30 பேர் வரை தலைமறை வாகியிருக்கலாம் என்று அவர்களை தேடும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தை விட்டு வெளியேறிய 30 வெளிநாட்டினரைக் கண்டுபிடிக்க விசாகப் பட்டினம் மாவட்ட நிர்வாகம் மாநிலத்தின் பிற  மாவட்டங்களின்ஆட்சியர்களை எச்சரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து மூன்று பேர்,  போட்ஸ்வானாவிலிருந்து ஆறு பேரும் வந்துள்ளனர், அவர்களில் ஆறு பேரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மீதமுள்ளவர் களில் மூன்று போட்ஸ்வானாவைச் சேர்ந்தவர்கள்   ஒருவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இவர்கள்  கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அவர் களது ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என “தி  டைம்ஸ் ஆப் இந்தியா” வெள்ளியன்று தெரி வித்துள்ளது.

புதுதில்லி நிலவரம்

 ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை புது தில்லியில் மட்டும் 12 பேர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தி எக்கனாமிக் டைம்ஸ் நியூஸ், தகவல் அடிப் படையில், மொத்தம் 12 பேரில் எட்டுப் பேர் வியாழ னன்றும், நான்கு பேர் வெள்ளியன்றும் ஒமைக் ரான் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரது சோதனை முடிவுகள் வெளியாகவில்லை. நான்கு பேரில் இருவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். ஒருவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.



 

;