லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருப்பவர் ஆஷிஷ் படேல். அப்னா தளம் (எஸ்) கட்சியின் செயல் தலைவரான ஆஷிஷ் படேல் ஒன்றிய இணையமைச்சர் அனுப்பிரியா படேலின் கணவர் ஆவார். இந்நிலையில், அமைச்சர் ஆஷிஷ் படேல் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது முக நூல் பக்கத்தில்,“தொழில்நுட்பக் கல்வித் துறைத் தலைவரை தேர்வு செய்வதில், நேரடி தேர்வுக்கு பதிலாக லஞ்சம் வாங்கிக் கொண்டு நிரப்பப்படுவதாக என் மீது குற்றச்சாட்டு வைக் கப்படுகிறது. என்னை அரசியல் ரீதியாக அப்பு றப்படுத்துவதற்கான சதி இது. பிரதமர் மோடி உத்தரவிட்டால் மட்டுமே எனது அமைச்சர் பதவியை விட்டு விலகுவேன்” எனக் கூறியுள்ளார். பாஜக மீது அப்னா தளம் (எஸ்) குற்றச்சாட்டு “ஆஷிஷ் படேலுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பாஜகவி ருக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் அவருக்கு எதிராக கூட்ட ணியில் இருந்து கொண்டே பாஜக சதி செய்து வருகிறது. ஆஷிஷ் படேல் ராஜினாமா செய்தால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்போம்” என பெயர் வெளியிட விரும்பாத அப்னா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு 13 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.