புதுதில்லி,ஏப்.8- முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் நியமித்தது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப நிபுணர்களை நீதிமன்றம் நியமித்தது. கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அணையின் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை நீதிபதிகள் நியமித்தனர். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம். மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரையை இரு மாநிலமும் கடைப்பிடிக்க வேண்டும். மேற்பார்வை குழுவுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.