states

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை மேலும் குறைத்தது உலக வங்கி!

புதுதில்லி, ஏப். 4 - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) குறித்த கணிப்பை உலக வங்கி மேலும் குறைத்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கலாம் என்று, கடந்த 2022 டிசம்பரில் உலக வங்கி கணிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அதனை 6.3 சதவிகிதமாக குறைத்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதத்திற்கு மேலாக இருக்கும் என்று இருக்கலாம் என்று ஆறுதல் அளித்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கடன்களுக்கான வட்டி விகிதமானது, நுகர்வைக் குறைக்கும் என்றும், இது வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கவும் உலக வங்கி தவறவில்லை. இந்திய உற்பத்தி துறை, உள்கட்டமைப்பு துறை என பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக இந்த துறைகளின் மூலமான வேலைகள் பெரியளவிலான தாக்கத்தினை எதிர்கொண்டன. பின்னர், வலுவான தேவை, அதிகளவிலான பொது முதலீடுகள், பொது வளர்ச்சி என அண்மைக்காலமாக அவை மேம்பட்டாலும் நுகர்வோர் செலவினங்கள் என்பது குறைந்து வருகின்றன என்றும் உலக வங்கி கூறியுள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் 6.6 சதவிகிதத்தில் இருந்து, 5.2 சதவிகிதமாக குறையலாம். நடப்புக் கணக்கு பற்றாக்குறை 5.2 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் அது கணித்துள்ளது.  இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமானது 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 4.4 சதவிகிதம் என்ற அளவிலேயே வளர்ச்சி கண்டிருந்தது. இது முந்தைய 2021-22 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டைக் காட்டிலும் 11.2 சதவிகிதம் குறைவாகும். அதுமட்டுமல்ல, 2022-23 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் அடைந்த 6.3 சதவிகிதம் என்ற வளர்ச்சியை விடவும் 1.9 சதவிகிதம் குறைவாகும்.  இந்நிலையில்தான், 2023-24 நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி அளவீட்டையுமே 6.3 சதவிகிதம் என்று உலக வங்கி குறைத்துள்ளது.