states

போக்சோ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்

நாகர்கோவில், ஏப்.1-  கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினருக்கு குழந்தைகள் நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. குற்றப்பத்திரிகை இந்த பயிற்சி வகுப்பை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. வேல்முருகன், பயிற்சி ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா, போக்சோ நீதிமன்ற அரசு வக்கீல் முத்துக்குமாரி மற்றும் குழந்தைகள் நல அலுவலர். சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள். எஸ்.ஐ.க்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 37 காவல் நிலையங்களிலும் பணியாற்றும் குழந்தைகள் நல அலுவலர் களாகநியமிக்கப்பட்டுள்ள போலீசார் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

 இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:  குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் காவல் துறை செயல்பட வேண்டும். போக்சோ வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும். போக்சோ வழக்குகள் தொடர்பாக பாதிக்கப்படும் மாணவிகளுக்கும்.

குழந்தைகளுக்கும் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் காவல் நிலையங்களில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு காவல் துறை ஆதரவுடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்திலும்  போக்சோ வழக்குகள் அதிகம் உள்ளன. இது பெரும் பாதிப்பை உண்டாக்கும். பெண் குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் குடும்பத்துக்கே அது ஆபத்தாகிவிடும்.  குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு போக்சோ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். போக்சோ நீதிமன்ற வக்கீல் முத்துக்குமாரி, போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சாட்சியங்கள், தடயங்கள் சேகரிப்பு, மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக விளக்கி பேசினார். இந்த நிகழ்வில் மாவட்ட சமூக அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனகா. குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் வின்ஸ்லி, சைல்டு லைன் ‘ஒருங்கிணைப்பாளர் கேத்ரின் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.