states

அசாம் முதல்வருடன் சேர்ந்து விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ்?

கவுகாத்தி, செப்.27- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று  அசாம். இந்த மாநிலத்தில் பிரம்ம புத்திரா நதியை ஒட்டிய பகுதியில் காசி ரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இந்த தேசிய பூங்காவில் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்திய வகை காண்டா மிருகங்களின் இல்லம் என்றும் இந்த தேசிய பூங்கா அழைக்கப்படுகிறது. இந்நிலையில், காசிரங்கா தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் சுற்றுலா சென்று வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு தேசிய பூங்கா விற்குள் செல்லக்கூடாது என்ற நிலை யில், அந்த விதிகளை மீறி மூன்று பேரும் இரவு நேரத்தில் சென்று வந்துள்ளனர். ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, அமைச்சர் பருவா ஆகியோர் அமர்ந்து  இருக்கும் எஸ்.யூ.வி ரக காரை சத்குரு ஓட்டிச்செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது சட்டவிரோதம் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதுதொடர்பாக, சோனேஸ்வர் நரா மற்றும் பிரபின் பேகு ஆகியோர் கோலகட் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும், அதனை மீறியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், விதி மீறல் எதுவும் நடை பெறவில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா சமாளித்துள்  ளார். ‘’வனவிலங்குகள் சட்டத்தின் படி, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இரவு நேரத்தில் சென்று வர பூங்காவின் வார்டன் அனுமதி அளிக்கலாம். நடப்பு சீசனுக்காக முறைப்படி நேற்று பூங்காவை நாங்கள் திறந்தோம். இப் போது சத்குருவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் வந்திருக்கிறார்கள். இவர்களை பின் தொடர்பவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். எனவே இந்த முறை சுற்றுலா பயணிகள் வருகை சிறப்பாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்’’ என்று சர்மா கூறியுள்ளார்.

;