தாமதமாகத் துவங்கும் வடகிழக்குப் பருவமழை
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 23-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந் துள்ள நிலையில், வட கிழக்குப் பருவமழை அக்டோபர் 26-ஆம் தேதி முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘சித்ரகாங்’ வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து 25-ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை யில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையைக் கடக்கும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சற்று முன்ன தாக அக்டோபர் 24 இரவு 9.30 முதல் 11.30 மணிக்கே இடையே சித்ரகாங் புயல் கரை யைக் கடந்தது. இதையடுத்து, அக்டோபர் 26 முதல் வடகிழக்குப் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது இரண்டு வார தாமதமாகும். கடந்த ஆண்டும் தாமதமாகவே வடகிழக்குப் பருவமழை துவங்கியது.
அடுத்த 50 நாட்கள் கடினமான மாநிலங்களில் ராகுல் பயணம்
இந்திய ஒற்றுமை யாத்திரை அடுத்த 50 நாட்களுக்கு காங்கிரஸுக்கு கடினமான மத்திய, வடக்கு மாநிலங்களுக்குள் பயணிக்க இருக்கிறது. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை ஒப்பிடுகையில் இனி செல்ல இருக்கும் மாநிலங்களில் காங்கிரஸின் அமைப்பு ரீதியிலான பலம் குறைவாகவே இருக்கிறது. காங்கிரஸுக்கு 2 சத விகிதம் மட்டுமே வாக்கு வங்கி உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரையில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தை பார்க்கும் பொழுது, இனி யாத்திரை பயணிக்க இருக்கும் மாநி லங்களிலும் மக்களின் இந்த உற்சாகம் தொடரும் என்று நான் நம்புகிறேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
2 மணிநேரம் முடங்கிய ‘வாட்ஸ் ஆப்’ சேவை!
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ‘வாட்ஸ் ஆப்’ சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறுஞ்செய்தி, புகைப்படங்கள், தரவுகள் அனுப்பவும் பெறவும் முடியாத நிலை ஏற்பட்டது. ‘வாட்ஸ் ஆப்’ அழைப்பு களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக ‘வாட்ஸ் ஆப்’-பின் தாய் நிறுவனமான மெட்டா பதிலளித்தது. தொழில்நுட்பக் குழுவினர் சோதனை செய்து வருவதாகவும், 24 மணிநேரத்தில் ‘வாட்ஸ் ஆப்’ சேவை மீண்டும் சீராக்கப்படும் எனவும் அறிக்கை மூலம் மெட்டா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலை யில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் முடங்கியிருந்த ‘வாட்ஸ் ஆப்’ சேவை, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வழக் கம்போல செயல்படத் துவங்கியது.
சவுக்கடி பெற்ற சத்தீஸ்கர் முதல்வர் பாகேல்!
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல், கவுரி - கவுரா பூஜையில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சவுக்கால் அடிக்கும் சடங்கு ஒன்று கடைப் பிடிக்கப்படும் என்ற நிலையில், அதிலும் பாகேல் பங்கேற்றார். அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. இந்த சவுக்கு ‘சொந்தா’ என அழைக்கப்படுகிறது. ‘குஷ்’ எனப்படும் ஒருவகை புற்களை கொண்டு இந்த சவுக்கு தயாரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, மேளதாளங்கள் உள்ளிட்ட இசை கருவிகளும் பின்னணியில் இசைக்கப்பட்டன. சவுக்கடி பெறுபவர்களுக்கு ஆசியும், வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ராகுலின் பயணத்தில் பங்கேற்கும் சரத்பவார்
“ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், நவம்பர் 7-ஆம் தேதி மகா ராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைகிறது. அப்போது, இந்தப் பயணத் திட்டம் ஒன்றில் பங்கேற்குமாறு, அசோக் சவான் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர்கள் என்னைச் சந்தித்து, அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி என்றாலும் இதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, எனவே, இங்கு அது நடைபெறும்போது அதில் இணை வோம்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத்தல ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு அனுமதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்காக மொத்தம் 17 ஆயிரத்து 850 விண்ணப்பங்கள் முன்னதாக அரசால் பெறப்பட்டன. இதில், 10,889 மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தற்போது கர்நாடக அரசு அனு மதி வழங்கியுள்ளது. இதேபோல், மூன்றாயிரம் இந்து கோயில்களுக்கும், 1,400 தேவா லயங்களுக்கும் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப் பட்டுள்ள நிலையில், அரசு கட்டணமாக ரூ. 450 வசூலிக்கப்பட்டு உள்ளது.
பிரியாணி கடைகளை மூடிய திரிணாமுல் அமைச்சர்
கொல்கத்தா, அக். 25 - பிரியாணி சாப்பிடுவதால் ஆண்களின் பாலியல் உணர்வு குறைவதாகக் கூறி, மேற்குவங்க முன்னாள் அமைச்சர் ஒருவர், அங்குள்ள 2 பிரியாணி கடைகளை இழுத்து மூடிய சம்பவம் நடந்துள்ளது. இந்தியர்களின் விருப்ப உணவாக பிரியாணி உள்ளது. எந்தவொரு விஷேசமாக இருந்தாலும் பிரியாணி விருந்துக்கே இன்றும் பெரும் வரவேற்பு உள்ளது. ஹோட்டல்களிலும் பிரியாணியே விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான், பிரியாணி சாப்பிடுவதால் ஆண்களின் பாலியல் உணர்வு பாதிக்கப்பட்டதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ரவீந்திர நாத் கோஷ் புகார் எழுப்பியுள்ளார். கூச்பிகாரில் உள்ள பிரியாணி கடைகளை வலுக்கட்டாயமாக இழுத்து மூடவும் செய்துள்ளார். “பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் கூச்பிகார் பகுதியில் பிரியாணி கடைகளை வைத்துள்ளனர். கடைகளை நடத்துவதற்கான உரிமம் எதையும் அவர்கள் பெறவில்லை. இந்நிலையில், இங்குள்ள பிரியாணி சாப்பிட்டதால் தங்களின் பாலியல் உணர்வு பாதிக்கப்பட்டதாகவும், என்ன மசாலா பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே தெரிய வில்லை எனவும் இப்பகுதியில் உள்ள ஆண்கள் கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த புகார்க ளையடுத்து இந்தக் கடைகளுக்கு வந்து ஆய்வு நடத்தி னோம். தற்போது இந்த கடைகளை மூடியிருக்கிறோம்” என்று ரவீந்திர நாத் கோஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரவீந்திர நாத் கோஷின் இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ரூ.708 கோடிக்கு மது விற்பனையா? அமைச்சர் விளக்கம்
சென்னை,அக்.25- தீபாவளியையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையானது என்ற தகவல் தவறானது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்று தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ கத்தில் கடந்த அக்.22, 23 மற்றும் 24 ஆகிய 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அடோபர் 24 அன்று ஒரே நாளில் மட்டும் ரூ.244 கோடிக்கு மது விற்பனை யானதாகவும் செய்தி ஒளிபரப்பியது. இதுதொடர்பாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபா வளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு தனியார் தொலைக்காட்சி நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தனியார் தொலைக்காட்சி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வரு வதால் தனியார் தொலைக்காட்சி மீது (தந்தி டிவி) சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
- சர்வதேச தொழிலாளர்கள் நலச்சட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் தேசிய சட்டங்களை வியட்நாம் தவறாமல் இயற்றுவதோடு, அவற்றை நடைமுறைப்படுத்தவும் செய்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான வியட்நாம் தூதர் குயென் ஃபுவோங் டிரா கூறியுள்ளார். சர்வதேசத் தொழிலாளர் அமைப்புடன் இணைந்து, மற்ற நாடுகளின் அனுபவங்களையும் கற்றுக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிறுத்துவதற்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஈரானில் இருந்து உளவு வேலையில் ஈடுபட்டதற்காக 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்துக்காக அவர்கள் உளவு வேலை பார்த்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் ஈரானியர்களை அடையாளங்கண்டு அவர்களைக் கொலை செய்வதே இந்தக் குழுவின் இலக்காகும். மேலும் பலர் இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் சந்தேகித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள 45 வயதாகும் குலோர்ஜியா மெலோனி, ஏராளமான சவால்களைச் சந்திக்கவிருக்கிறார். இவரது வலதுசாரிக் கொள்கைகள் நெருக்கடியை அதிகப்படுத்தவே செய்யும் என்று நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளனர். குடியரசான பின்பு, 74 ஆண்டுகளில் 68 அரசுகள் இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.