states

img

மழையால் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்குக!

தஞ்சாவூர், செப்.30 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:  தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று, விளை பொருட்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேட்டூர் அணை யில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீரால் கொள்ளிடக் கரையோர விளைநிலங் களில் வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.  டெல்டா மாவட்டங்களில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இவ்வாண்டு ஏறத்தாழ 5.20 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு நிறு வனம் முன்வரவில்லை என மாநில அரசு தெரிவித்தது. இதனால் குறுவைக்கான பயிர் காப்பீடு செய்ய இயலவில்லை. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநில அரசு ஈடுசெய்யும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனவே, அறுவடை பாதிப்பு மற்றும் பயிர் பாதிப்புகள் குறித்து உடனே கணக்கெடுப்பு நடத்தி, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கிட வேண்டுகிறோம்.

21 சதவீத ஈரப்பதம்

தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 21 சதவீதம் என அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி கோரியுள்ளதை வரவேற்கிறோம்.  அதேநேரத்தில் தேவையான இடங்களில், தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறந்திட வும், கொள்முதல் செய்த நெல்லை உட னுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் வேண்டுகிறோம். நெல் கொள்முதல் நிலையங்களில் நடை பெறும் ஊழல், முறைகேடுகளை களைந் திட வேண்டும். கடந்த காலங்களை போன்று நடமாடும் கொள்முதல்  நிலை யங்களை செயல்படுத்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் உணவுத் துறை செயலாளர் சுதன்ஷீபாண்டே உணவு தானிய கொள்முதலில் தனியாரை கொண்டு வர விரும்புவதாகவும், தேவை யை விட கூடுதலாக கொள்முதல் செய்வ தாகவும், கொள்முதல் செலவுகளை குறைத்திட வேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.  எனவே ஒன்றிய அரசின் கொள் முதலை நிறுத்த முயற்சிப்பதை கண்டிக் கிறோம். தமிழக அரசு ஒன்றிய அரசின் இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும். சம்பா பருவத்திற்கான நடவு பணிகள் துவங்கியுள்ள நிலையில் விண்ணப்பிக் கும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்க முன் வரவேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் சாகுபடி சான்றை வைத்து கடன் வழங்கிட வேண்டும். நில உடைமையாளரின் ஒப்புதல் தேவை எனக் கூறி, சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்ப தாக தெரிகிறது. கிராம நிர்வாக அலு வலர்கள் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு கோயில், மட,  அறக்கட்டளை நிலங்களுக்கும் கடன்  வழங்க சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

பயிர்க் காப்பீடு

நடப்பு சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு இ-சேவை மையங்களில் வழங்கப்படும் 21 விபரங்கள் அடங்கிய ரசீது வழங்க படுகிறது. ஆனால் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அத்தகைய விபரம் அடங்கிய ரசீது வழங்கப்படுவதில்லை.  இ-சேவை மையங்களில் வழங்கப் படும் ரசீது போன்று வழங்கினால் சர்வே எண், வங்கிக் கணக்கு, வருவாய் கிராமம் ஆகியவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் விபரங்களுடன் ரசீது வழங்கப்பட வேண்டும். சிட்டா, அடங் கலில் முழு நிலங்களுக்கும் பயிர் காப்பீடு பெறப்பட வேண்டும். கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனே பயிர் இழப்பு தொகை வழங்கிட வேண்டுகிறோம். சம்பா நடவுப் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்போதே யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமையை உணர்ந்து சாகுபடி பணிகள் தடைபடாவண்ணம் உரம் வழங்கிட முன்வர வேண்டும். செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி விலை யேற்றம் ஏற்படுவதை தடுத்திடவும், பிற பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் தடுத்திட வேண்டும். செயற்கையாக உரப் பற்றாக்குறை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நிலங்களுக்கு இழப்பீடு

கடந்த 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிக்காக இடம் கொடுத்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள், கூடுதல் இழப்பீடு கேட்டு  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற னர். சாலை அமைக்கும் நிறுவனத்துடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். இதில், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக விளைநிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து போராடிய விவசாயி ஜெயராமன் மீது எவ்வித வழக்குகளும் இல்லாதபோது, குண்டர் தடுப்புச் சட்டத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். இது ஜனநா யகத்தின் குரல்வளையை நெரிப்பதாக உள்ளது. இதற்கு காரணமான தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக அரசு பல இடங்களில் விளை நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. தமிழக அரசு இதில் அலட்சியமாக செயல்படக் கூடாது.

மதகு உடைந்தது ஏன்?

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணையில், நடுமதகு கடந்த செப். 21 ஆம் தேதி உடைந்ததால், விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பயன்பட வேண்டிய 6 டி.எம்.சி தண்ணீர் பயனற்று போய்விட்டது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கையே காரண மாகும். கோடை காலத்தில் அணை முறை யாக பராமரிக்கப்படவில்லை. அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்துள்ளனர்.  எனவே தமிழகம் முழுவதும் உள்ள அணைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்திட சிறப்பு வல்லுநர் குழு அமைத்திட வேண்டும். பரம்பிக்குளம் அணையில் மதகு உடைப்பு ஏற்பட காரண மான பொதுப் பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும். இவ்வாறு சாமி.நடராஜன் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



 

;