சென்னை, அக்.18- தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எடப்பாடி அணியினர் பெரும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப் பட்டனர். சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் செவ்வாயன்று (அக்.18) காலை 10 மணிக்கு தொடங்கியது. வழக்கம் போல் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப் பட்டது. அப்போது அதிமுக இரட்டை தலைமை பிரச்சினை இன்னும் ஓயவில்லை என்பது எதிரொலித்தது. இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக் கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தபேர வைத் தலைவர் மு.அப்பாவு, “வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பிறகு, இதுகுறித்து கேள்வி எழுப்புங்கள். அப்போது நான் பதிலளிக்கிறேன்” என்றார். ஆனால், அதனை ஏற்க மறுத்த இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட னர். பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட னர். இதனால், பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. “நீங்கள் பேசும் எதுவும் அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது. ஏற்கெனவே 89-ல் ஜானகி அம்மாள் பதவிப்பிரமாணத்தின்போது இதே போல்தான் பிரச்சனை செய்தீர்கள். இப்போதும் அதுபோன்ற ஒரு நிலைமை உருவாக்க முயற்சிக்க வேண்டாம். பேரவையில் கலகம் செய்து அவை யின் மாண்பை கெடுக்காதீர்கள். இது மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும் இடம். கேள்வி நேரத்தை தடை செய்யா தீர்கள். நீங்கள் பேசுவதற்கு நான் நேரம் கொடுக்கிறேன் என்றும் பேரவைத் தலைவர் கூறினார். அதை ஏற்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
பாஜக விசுவாசம் காரணமாக அமளியா?
அரசு கொண்டு வரும் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க முடியாமல் பாஜகவுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று என்று குறிப்பிட்ட பேரவைத்தலைவர் அமை தியை ஏற்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளையும் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் முறியடித்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து,அமளியில் ஈடு பட்ட எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றும்படி சபைக் காவலர்க ளுக்கு பேரவைத் தலைவர் உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து அனை வரும் வெளியேற்றப்பட்டனர். பேரவை வளாகத்திற்குள்ளும் முழக்கங்கள் எழுப்பி மீண்டும் மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் பேரவை அலுவல்கள் 45 நிமிடத்திற்கும் மேல் தடைபட்டது. இதனைத்தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் பேரவை நடவடிக்கைகளில் இருந்து இரண்டு நாட்கள் நீக்கம் செய்வதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். அப் போது, அந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் விடுத்த கோரிக்கையை ஏற்று தண்டனை ஒருநாளாக குறைத்து புதன்கிழமை (அக்.19) பேரவை நிகழ்ச்சிகளில் அதிமுக எடப்பாடி அணியினர் பங்கேற்கலாம் என்று பேரவைத் தலைவர் அறிவித்தார்.