அபாயகரமான கவர்ச்சி
குழந்தைகள் உண்ணும் ஜெல்லி, செர்ரி பழம், பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரை, சிரப் ஆகியவைகளில் கவர்ச்சியாக சிவப்பு நிறம் தோன்றுவதற்கு எரித்ரோசின் (erythrosine) எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இதில் எந்த சத்தும் இல்லை. இது உணவை பாதுகாப்பதும் இல்லை. கவர்ச்சிக்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது என்கிறார் Center for Science in the Public Interest (CSPI) சேர்ந்த விஞ்ஞானி தாமஸ் கல்லிகன். இந்த வேதிப்பொருள் எலிகளில் புற்று நோயை உண்டாக்குகிறது. 1990களிலேயே இது அமெரிக்க மருந்துக்கட்டுப்பாடு கழகத்தால் தடை செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எலிகளுக்கும் மனிதர்களுக்கும் புற்று நோய் ஏற்படுவதில் வேறுபாடு உண்டு என்ற வாதத்தை வைத்து தடை செய்வதை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் இந்த வேதிப் பொருள் சிறுவர்களிடம் கவனக் குறைபாடு-அதீத செயல்பாடு எனும் ஏடிஎச்டி (ADHD) கோளாறை ஏற்படுத்துகிறது என பிற ஆய்வுகள் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் 1994 லேயே இதை தடை செய்து விட்டது. அதன்பின் ஜப்பான், சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தடை செய்து விட்டன. அமெரிக்கா இப்போதுதான் தடையை அறிவித்துள்ளது.
மூளையின் நீட்சி கண்
பக்கவாதம்(stroke)வருவதை முன்கூட்டியே அறிவதற்கு கண் சோதனை ஒரு எளிய வழியாக இருக்கலாம். விழித்திரையில் உள்ள 29 இரத்தக் குழாய்களின் ‘ ரேகைகள் ‘ பக்கவாதம் வரும் அபாயத்துடன் தொடர்புள்ளவை என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பக்கவாதம் வருவதற்கு 90% காரணமான இரத்த அழுத்தம், சத்துக் குறைவான உணவு ஆகியவை மாற்றக் கூடியவை என்பதால் இந்த ஆய்வின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களை காப்பாற்ற முடியும்.மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜனும் பிற சத்துகளும் கிடைக்காமல் போவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகளில் மூளைக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பும் கண் இரத்தக் குழாய்கள் மூளை இரத்தக் குழாய்களை பிரதிபலிக்கின்றன என்பதும் காட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் தற்போதைய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 45161நபர் களின் விழித்திரை பிம்பங்கள் நுண்ணோக்கி காமிரா மூலம் சேகரிக்கப்பட்டன. இவர்களில் 749நபர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களின் கண் இரத்தக் குழாய்களின் அடர்த்தி, வடிவம் உட்பட 29 வகை குணாம்சங்கள் பக்கவாதத்துடன் தொடர்புடையவை என்று செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை உள்ளவர்களுக்கு 10இலிருந்து 20%வரை பக்கவாதம் வரும் கூடுதல் அபாயம் உள்ளது. இந்த ஆய்வு முறையானது பக்கவாதம் வருவதை கண்டறிய நடைமுறை சாத்தியமானதும் எளிமையானதும் ஆகும். குறிப்பாக தொடக்க நிலை உடல்நல நிலையங்களுக்கும் குறைவான ஆதாரங்கள் உள்ள அமைப்புகளுக்கும் ஏற்றது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். இந்த ஆய்வு ,’heart’ எனும் இதழில் வந்துள்ளது.
இரும்பு உலோக காலத்தில் பெண்கள் தலைமை
இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரும்பு உலோக காலத்தில் பிரிட்டனில் வசித்த செல்டிக் இன மக்கள் சமுதாயத்தில் பெண்கள் சிறப்பான இடத்தை பெற்றிருந்தார்கள் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்த 50 செல்டிக் மனிதர்களின் மரபணுவை ஆய்வாளர்கள் தொகுத்துள்ளார்கள். பெரிய இனக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஒற்றை பெண் மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள் என்றும் உறவினரல்லாத 80% நபர்கள் ஆண்கள் என்றும் காணப்பட்டது. ‘ ஆண்கள் திருமணமானவுடன் மனைவியின் குடும்பத்துடன் சென்று சேர்வதை இது காட்டுகிறது. நிலம் பெண் வழியே கொடுக்கப்பட்டுள்ளது.’ என்கிறார் டப்ளினிலுள்ள டிரினிட்டி கல்லூரியை சேர்ந்த மரபணுவியலாளர் லாரா கேசிடி. டார்செட் எனும் இடத்தில் கிடைத்த இந்த தரவுகளை பிரிட்டனிலுள்ள மற்ற இடங்களில் கிடைத்த உலோக கால தரவுகளுடன் ஒப்பிட்டனர். மற்ற இடங்களில் குறைவான இடுகாடுகளே இருந்தாலும் அங்கும் ‘பெண் குழும ‘ (matrilocal )சமூகங்களின் எடுத்துக்காட்டுகள் காணப்பட்டன. செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியா மரபணுக்கள் தாய் வழியிலேயே சுவீகரிக்கப்படுவதால் இதை கூற முடிகிறது. ‘பெண் குழுமம்’ என்பதும் ‘தாய் வழிச் சமூகம் ‘ (matriarchal) என்பதும் ஒன்றல்ல என்கிறார் கேசடி. பிரிட்டனில் இருந்த செல்டிக் சமுதாயத்தில் ஆண்களும் அதிகார பொறுப்புகளில் இருந்திருக்கலாம். இந்த சமுதாயத்தில் பெண்கள் சொத்துரிமை பெற்றிருக்கலாம் அல்லது விவாகரத்து செய்ய இயன்றிருக்கும் என்பது படையெடுத்த ரோமானியர்களுக்கு ஆச்சரியமளித்திருக்கலாம். அகழ்வாய்வு நடந்த இடத்தில் பெண்கள் சிறப்பான முறையில் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள். அவர்கள் படை நடத்திச் சென்றிருக்கிறார்கள். ‘உலோக காலத்தில் பெண்கள் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பது முதலில் அகழ்வாய்வில் தெரிந்தது இப்போது மரபணு மூலமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குழு அடையாளத்தை பிரதானமாக தாய் வழி பரம்பரை உருவாக்கியிருக்கலாம்’ என்கிறார் அகழ்வாய்வாளர் மைக் ரஸ்ஸல். இந்த ஆய்வு நேச்சர் ‘nature’ எனும் இதழில் வந்துள்ளது.