சிறுமியர் மீது கொடுமை-சிலர்
செய்திடும் போக்கு மடமை
வேரொடு அழித்திடு தீயரை-இனி
வென்றெடு சிறுமியர் துயரை!
காமுகக் கயவரை வெறுத்திடு-இங்கு
காணா தவரை ஒழித்திடு
தீமுகப் பேயவர் மண்ணில்-நீ
தீயை வையவர் கண்ணில்!
எங்கும் பாலியல் துன்பம்-அவர்
இல்லா தொழிந்தால் இன்பம்
பொங்கும் நன்மை ஓங்கும்-தீமைப்
போக்கிடு நாட்டில் எங்கும்!
பெண்களை இழிவு செய்யும்-மதப்
பேய்களால் நாட்டில் துன்பம்
மண்ணிலே பெண்களின் பெருமை-போற்றி
மாற்றுக அவரின் அடிமை!
பள்ளிகள் கல்லூரி கூட-இங்கு
பாலியல் துன்பத் தோட
கிள்ளு அங்கவர் கீழ்மை-மிகு
கேட்டை அகற்றலே தூய்மை!
பெண்ணுரிமை காக்கப் போராடு! - நீக்கு
பெறுமவர் துன்பத்தை வேரோடு!
கண்ணெனப் போற்றுவோம் பெண்ணை! - அவர்
காக்கும் காவலாம் மண்ணை!