states

img

‘பாதிக்கப்பட்ட மக்களின் போர்ப் படைத் தளபதிகள்’

அவிநாசி, மே 23- பாதிக்கப்பட்டவர்கள் எவரானாலும் அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட்டுகள் போர்ப்படை தளபதிகளாக செயல்படுவார்கள் என அவிநாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலக (கே.தங்கவேல் நினைவகம்) திறப்பு விழா, பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு கோம்பைக்காடு நடராஜ் தலைமை  வகித்தார்.  கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “அரசியல் கட்சிகள் கொள்கையிலே மாறுபட்டு இருந்தாலும், அரசியலில் ஒருவரை ஒருவர் மதிக்கிற பண்பு வளர வேண்டும். கட்சி அலுவலகம் என்பது சேவை செய்கிற அலுவலகமாக செயல்படும். திருப்பூர் மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் தோழர் கே.தங்கவேல்.  சட்டமன்றத்தில் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மூலம் ஆக்கப்பூர்வமாக அழுத்தமான விபரங்களை பதிவு செய்தவர் மக்கள் தலைவர் கே.தங்கவேல்” என்று குறிப்பிட்டார். இந்து மதத்திற்கு ஆபத்து என்றால் அது பாரதிய ஜனதா கட்சி மூலம்தான். குஜராத் இனக் கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உடை பிரச்சனையிலிருந்து உணவு பிரச்சனை வரை நாட்டை கலவரமாக பாஜக அரசு மாற்றியுள்ளது. ஜவுளித்துறை மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.   பஞ்சு விலை உயர்வால் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைக்கருத்தில் கொள்ளாமல் மோடி அரசாங்கம், பெருமுதலாளிகளான அம்பானி அதானி போன்றோரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தை நம்பி ஜவுளித் தொழிலை பாதுகாக்க முடியாது. எனவே, தமிழக அரசாங்கம் பருத்தியை கொள்முதல் செய்கிற கார்ப்பரேசனை உருவாக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள் எங்கே?

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சென்ற 14 லட்சத்து 87 ஆயிரம் பேர்களில், தூய்மைப் பணியாளர் பணிக்கு எம்ஏ படித்தவர் விண்ணப்பித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய பாஜக அரசு தற்பொழுது எங்கே என்று தெரியவில்லை. கடந்த 8 ஆண்டு கால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வேலை கொடுப்பதைவிட வேலையை விட்டு நீக்கியது தான் அதிகம்.  பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பது தான் மோடி அரசாங்கத்தின் குறிக்கோளாகும். அதேசமயம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய மோடி அரசாங்கம்.  இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத்தலைவர் பி.முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், திருமுருகன்பூண்டி நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். டேங்க் ஆப்ரேட்டர் சங்க மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி நன்றி கூறினார். முன்னதாக, கே.தங்கவேல் நினைவகம் கட்ட உதவிபுரிந்த எஸ்.ஆர்.வி.பாலுசாமி, பி.ஆர்.சேமலையப்பன், எல்ஐசி பழனிச்சாமி, திமுக செல்வம், அண்ணாதுரை, கோபி பழனிசாமி, கோம்பகாடு நடராஜ், ருத்திராஜ், சேதுமாதவன் உட்பட பலருக்கு பயனாடை அணிவித்து கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
 

;