states

தீக்கதிர் விரைவு செய்திகள்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து : அதிகபட்ச நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 22 - காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிந்தோர் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குமாறு சிஐடியு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர்  ஜி.சுகுமாறன் ஆகியோர்  அறிக்கையில் கூறியுள்ளதாவது : ஆபத்து நிறைந்த தொழிலான பட்டாசு தயாரிப்பு தொழிற் நிறுவனங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலை ஆய்வக துறை அதிகாரிகளின் மெத்தன போக்கே இந்த விபத்துக்கு அடிப்படை காரணமாக உள்ளதாக கருத வேண்டியுள்ளது. கடந்த மாதம் கடலூரில் ஏற்பட்ட இது போன்ற விபத்தில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.  அதன்பின்பும் அமலாக்க அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த இந்த ஆலையில் பணிபுரியும்  தொழிலாள ருக்கு பணியிட பாதுகாப்பு,  உரிய காப்பீடுகள் எதுவும் செய்யப்படவில்லை இந்த விபத்தில் பலியாகி இருக்கிற அனை வரும் அன்றாட கூலி தொழிலாளிகள், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளருக்கு தமிழ்நாடு அரசு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தொகையும் வழங்கவும், இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்கஅமலாக்க  அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளை முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திட வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

கொப்பரைக்கு ஊக்கத்தொகை:  தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விருதுநகர், மார்ச் 22 - கொப்பரை கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.விஜயமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வெளி யிட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்க ளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, குறிப்பாக மிளகாய்க்கு சிறப்பு மண்டலம், எண்ணை வித்துக்க ளுக்கான சிறப்பு மண்டலம், பருத்திக்கான சிறப்பு இயக்கம், ஒவ்வொரு வட்டத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி, இயந்தி ரங்களுக்கு 125 கோடி மானியம், வேலைக்கு தனி தொகுப்பு க்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு, அரசம்பட்டி தென்னங்கன்று புவிசார் குறியீடு, தென்னை வளர்ச்சிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு, தென்னை வீரியம், குட்டை, நெட்டை போன்ற ரகங்களை உருவாக்குவதற்கு கன்னியாகுமரி, செங்கோட்டை, விருதுநகர் மாவட்டம், தேவதானம் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். அதேசமயம், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தேங்காய்,  தேங்காய் எண்ணெய்யை அனைத்து ரேஷன் கடைக ளிலும் அனைத்து குடும்பங்களுக்கும் மானியத்தில் வழங்க வேண்டும், மார்க்கெட்டிங் மூலமாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்டங்கள் தோறும் தென்னை சார்ந்த  தொழிலை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மரம் ஏறும் இயந்திரங்கள், பூச்சி மருந்துகள், உரங்கள், முழு மானியத்தில் வழங்க நிதி ஒதுக்க வேண்டும், மேலும் தென்னை விவசாயத்தை தோட்டக்கலைத்துறையில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு  அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து தென்னை விவசாயத்தை, தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டு மென  சங்கம் சார்பில் அ.விஜயமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மந்தவெளி சாலைக்கு டிஎம்எஸ் பெயர்: அரசாணை வெளியீடு

சென்னை,மார்ச் 22- தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை  மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘டிஎம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும், தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார். தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லி சைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித்  திரைப்படங்களில் பாடியுள்ளார். பல  நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளி ளிட்ட திரைப்படங்களில் நடித்துள் ளார். பேரவைச் செம்மல், கலைமா மணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.  2002 இல் தமிழ்நாடு இயல் இசை  நாடக மன்றத் தலைவராக நியமிக்கப் பட்டார். தன் பாடல்கள் மூலம் இன்றும்  கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டி ருக்கும் டிஎம்எஸ் 91-வது வயதில் 2013 ஆம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில், டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை மந்தவெளியில் அவர்  வாழ்ந்த வீடு அமைந்த மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சூட்டுகிறார். வரும் 24 ஆம்  தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் வர் இந்தப் பெயரை சூட்டுகிறார்.

தமிழ்நாட்டில்  மார்ச் 26 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, மார்ச் 22- தென் இந்திய பகுதிகளின் மேல்  நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு  திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவு கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மார்ச் 23 அன்று  இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும். 24 ஆம் தேதி முதல் 26 வரை ஒரு  சில இடங்களில் லேசானது முதல்  மிதமானது வரை மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய லேசான மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

சென்னை, மார்ச் 22- சென்னை கோயம்பேடு சந்தைக்கு தருமபுரி, ஓசூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து தினசரி 30 வாகனங்கள் மற்றும் 20-க்கும்  மேற்பட்ட மினி வேன்கள் மூலம் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.  இந்த நிலையில், புதனன்று(மார்ச் 22) கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பனை சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே  கடந்த 4 நாட்கள் பரவலாக பெய்த திடீர் மழையால் பூ  உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து இருந்தது.  இந் நிலையில் சாமந்தி, ரோஜா பூக்கள் அதிகளவில் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து மேலும்  குறைந்து பூக்கள் விலை அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு  முன்பு ஒரு கிலோ ரூ.80க்கு விற்ற சாக்லேட் ரோஸ் ரூ.140-க்கும், மல்லி ரூ. 300-க்கும் விற்பனையானது.

‘நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்’: முதல்வர் 

சென்னை, மார்ச் 22- ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கி யமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இவ் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும்,  மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நமது உடலில் அனைத்து செயல்பாடு களும் முறையாக செயல்பட தண்ணீர் மிகமிக அவசியம். உணவின்றி கூட மனி தரால் பல நாட்கள் இருக்க முடியும். ஆனால்  நீரின்றி இருக்க முடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை  வீணாக்கக் கூடாது. பாதுகாப்பாக வைத் திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.  நீர்நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வள மானது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மைக் காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தண்ணீரைக் காப்போம். தாய்நிலத்தைக் காப்போம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஃபுளூ  காய்ச்சல்  பிரச்சனைக்கு  தீர்வுகாண நடவடிக்கைகள்  எடுப்பது  அவசியம்

சென்னை, மார்ச் 22-  இன்ஃபுளூயன்சா தொற்று  நேர்வுகள் கணிசமாக அதிகரித்து வரும் பிரச்சனையை  நாடு தற்போது எதிர் கொண்டுள் ளது. ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார தகவல் தளத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரையிலான காலஅளவின்போது கடுமை யான சுவாசப்பாதை சுகவீனம் அல்லது இன்ஃபுளூயன்சா போன்ற நோய் பாதிப்பு அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஏறக் குறைய 10 லட்சம்  என்ற அளவை எட்டியிருக்கிறது.  இக்காலஅளவின்போது, இன்ஃபுளூயன்சாவின் பல்வேறு  துணை வகைகள் இருந்தது  ஆய்வகங்களால் உறுதிப் படுத்தப்பட்ட 3000-க்கும் அதிக மான நேர்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. பருவகால இன்ஃபுளூ யன்சா ஒரு பொது சுகாதார பிரச்சனையாக இருப்பதால், நாட்டில் ஃபுளூ காய்ச்சல் பிரச் சனைக்கு தீர்வுகாண நடவடிக் கைகள் எடுப்பது முக்கியம்.  

இன்ஃபுளூயன்சா தொற்று வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு சுகாதார பரா மரிப்பு மற்றும் மருந்துகள் தயாரிப்பில் உலகளவில் முதன்மை வகிக்கும் அபாட் நிறுவனம் ஒரு வட்டமேஜை நிகழ்வை சென்னையில் நடத்தி யது. தங்களையும் மற்றும் தங்களது குடும்பங்களையும் மற்றும் சமூகத்தையும் இத்தொற்றுக்கு எதிராக எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவான தகவலைத் தெரி வித்து விழிப்புணர்வை உயர்த்து வதே இந்நிகழ்வின் நோக்க மாகும் என்று சென்னை,  அப்போலோ மருத்துவமனை யின் தொற்றுநோய்கள்  துறை யின் முதுநிலை நிபுணர் மருத்து வர் வி. ராமசுப்ரமணியன் கூறி னார். இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இன்ஃபுளூ யன்சா நேர்வுகளில் தமிழ்நாடு  எண்ணிக்கை அளவில் இரண்டா வது இடத்தில் இருந்தது. அதுவும் 2023 ஜனவரி மாதத்தில் இது மிக அதிகமாக இருந்தது.  இன்ஃபுளூயன்சா பற்றி சரியாகப் புரிந்துகொள்வதும் மற்றும் இந்த பருவகால தொற்று, அதன் சிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகளை அறிந்திருப்பதும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

ஊதிய உயர்வை ஏற்றனர் தொழிலாளர்கள்

லண்டன், மார்ச் 22- பிரிட்டனில் ரயில்வே நிர்வாகம் தந்த ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்வதாகப் போராடி வந்த தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உள்ள தொழிலாளர்கள் போராடி வந்தனர். பிரிட்டனில் அனைத்துத் துறை ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்கியிருந்தார்கள். குறிப்பாக, ரயில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முழுமையான வேலை நிறுத்தத்தைச் செய்தனர். தொழிலாளர்களின் உறுதியான நிலைப்பாட்டைக் கண்ட நிர்வாகம் வேறு வழியின்றி இறங்கி வந்தது. 9.2 விழுக்காடு முதல் இந்த ஊதிய உயர்வு இருக்கப் போகிறது. பேச்சுவார்த்தைகளுக்கே வராமல் இருந்த நிர்வாகம் அளித்துள்ள ஊதிய உயர்வை ஏற்கலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கான பதிலை, சங்க உறுப்பினர்களிடமே விட்டுவிடலாம் என்று தேசிய ரயில் மற்றும்போக்குவரத்து சங்கம் முடிவு செய்தது.  சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் 90 விழுக்காடு உறுப்பினர்கள் பங்கேற்று வாக்களித்தனர். வாக்களித்தவர்களில் 76 விழுக்காட்டினர், நிர்வாகம் முன்வைத்துள்ள ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ளலாம் என்று வாக்களித்திருக்கிறார்கள். தற்போது போடப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு உடன்பாடு ஜனவரி 2025 வரையில் நடைமுறையில் இருக்கும். கிட்டத்தட்ட ஓராண்டாக இருந்து வந்த பிரச்சனை தொழிலாளர்களின் உறுதியான ஒற்றுமையால் நிறைவு பெற்றுள்ளது. 


 

 

;