states

தீக்கதிர் விரைவு செய்திகள்

குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்கள்?

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கி, 29-ஆம் தேதி வரை  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்களின் உத்தேச பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 1948-இல் உருவாக்கப்பட்ட பல் மருத்துவர்கள் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா மற்றும் 1947-இல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய  நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையத்தை உருவாக்கும் மசோதா; மாநில  கூட்டு றவு சங்கங்கள் திருத்த மசோதா உட்பட மொத்தம் 16 புதிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.

சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்தது

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் ஜன்தல்பூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் மால்கான். இங்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இந்நிலையில், இங்கு சுண்ணாம்புக் கல்லை வெட்டியெடுக்கும் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 

41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு

சென்னை, டிச.2- தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி வரை 41.52 லட்சம் மின் இணைப்புகள்  ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 41.52 லட்சம் மின் இணைப்பு கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆவண எழுத்தர்களுக்கு  நல நிதியம் அமைப்பு

சென்னை,டிச.2- பதிவுத் துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (டிச.2)சென்னை தலைமைச் செயலகத்தில், தொடங்கிவைத்தார். இந்நிதியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடும் அடையாளமாக 7 ஆவண எழுத்தர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதற்காக உருவாக்கப்பட்ட ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5,188 நபர்களிடம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர்களாக சேர ஒருமுறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1000 வசூலிக்கப்படும்.  இதுமட்டுமல்லாமல், பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.10 வீதம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்படும். ஆவண எழுத்தர்களின் நல நிதிய  உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு உதவித் தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் மற்ற உடல் ஊனங்களுக்கு உதவித் தொகையாக ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, மகப்பேறு  உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, இறுதி சடங்கு நிதி, மூக்குக் கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, மற்றும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மழைக்கு வாய்ப்பு

சென்னை,டிச.2- தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமையன்று (டிச.3) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்த மான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு -  வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதியை ஒட்டி வட தமிழகம், புதுவை, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். டிச.3 அன்று  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 6 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங் களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு  வழங்க உறுதி கொள்வோம்: முதல்வர் 

சென்னை,டிச.2- மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளார். சர்வதேச மாற்றுத்திறனா ளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்க ளுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி  மேற்கொள்வதுடன், இதற்கான  நடவடிக்கைகளில் ஈடுபடுவ தற்காக போதுமான விழிப் புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது. இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டி கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது. இந்நாளில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர் களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோமாக.” இவ்வாறு அந்த செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.

ஆயுதங்களைத் தர வேண்டாம் முன்னாள் அதிகாரிகள் வேண்டுகோள்

வாஷிங்டன், டிச.2- புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் இஸ்ரேலிய அரசுக்கு எந்தவித ஆயுதங்களையும் வழங்க வேண்டாம் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இஸ்ரேலில் அரசியல் நிலையற்ற தன்மை தொடர்கிறது. ஆனால், அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அப்பாவி பாலஸ்தீன  மக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். இஸ்ரேலின் இந்தக் கொலை வெறித் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு அந்நாட்டின் முன்னாள் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இஸ்ரேலுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் டேனியல் குர்ட்செர் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முன்னாள் அதிகாரி ஆரோன் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றியுள்ள இருவரும், “மேற்குக் கரைப்பகுதி, அல் அக்சா மசூதி வளாகம் மற்றும் சட்டவிரோதமாக குடியேற்றம் நடக்கும் பகுதிகள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை மாறக்கூடாது. இதற்கு அமெரிக்கா துணைபோகக்கூடாது. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு சட்டவிரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவே செய்யும்” என்று எச்சரித்திருக்கிறார்கள்.



 

 

;