ஆகஸ்ட் 14-ஐ “பிரிவினை கொடூர நாளாக” கடைபிடிக்க கேரள பல்கலைகழகங்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கொடுத்துள்ள ஆணைக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவின் விடுதலைக்காக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் மற்றும் அந்த போராட்டத்தை அடக்க பிரிட்டஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட கொடூர அடக்குமுறைகளை நினைவூட்டும் நாளாகும். விடுதலை போராட்ட இயக்கத்தில் எந்த பங்கும் இல்லாமல் பிரிட்டஷாருக்கு சேவகம் புரிந்த சங் பரிவரம், இப்போது பிளவுவாத நிகழ்ச்சி நிரல் மூலம் விடுதலை நாளை சிறுமைப்படுத்த முயல்கின்றது.
ஆகஸ்ட் 14-ஐ “பிரிவினை கொடூர நாளாக” கடைபிடிக்க பல்கலைகழகங்களுக்கு ஆளுநர் கொடுத்துள்ள ஆணை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. சங் பரிவாரத்தின் பிளவுவாதத்துக்கான மேடையாக தனது கல்வி வளாகங்களை மாற்றுவதற்கு கேரளம் ஒரு போதும் அனுமதிக்காது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.