states

அரசு முடிவு செய்ய வேண்டியவற்றில் ஆளுநர் தலையிடுவது சரியல்ல: கொடியேரி பாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம், பிப்.21- மார்ச் 1 முதல் 4 வரை எர்ணாகுளம் மரைன் டிரைவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். பிரதிநிதி கள் மாநாட்டை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மார்ச் 1ஆம் தேதி துவக்கி வைக்கிறார். மரைன் டிரைவிலும் மற்ற இடங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்படும். மார்ச் 4ஆம் தேதி மரைன் டிரைவில் பொதுக்கூட்டம் நடக்கிறது என்றார். மாநில மாநாட்டில் யெச்சூரி தவிர, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தா காரத், பினராயி விஜயன், எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் என்றார்.  ஏகேஜி மையத்தில் சோலார் ஆலையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொடியேரி பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:  ஆளுநரின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக ஆளுநரிடம் அடிபணிந்த அரசு என்பது ஊடகக் கருத்து என்றும், அந்த நேரத்தில் அரசியல் சாசன நெருக்கடியை எப்படித் தீர்ப்பது என்பதை மட்டுமே பார்த்ததாகவும் கொடியேரி கூறினார். ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை கட்சி விரும்பவில்லை. ஆளுநர் களைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய கிளம்பினால் அதை அனுமதிக்க முடியாது.

சட்டசபை கூட்டத் தொடருக்கு முன் ஆளுநரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை. அரசு முடிவு செய்ய வேண்டியவற்றில் ஆளுநர் தலையிடுவது சரியல்ல. அரசு செயலரை மாற்றுமாறு ஆளுநர் கோரவில்லை. ஆளுநர் எடுத்த நடவடிக்கையை அவரே பின்னர் திரும்பப் பெற்றதாகவும் கொடியேரி கூறினார். தற்போது வேறு எந்த நெருக்கடியும் இல்லை. பிரச்னைக்கு தீர்வு காண அரசு  முன்னுரிமை அளித்து வருகிறது. ஆளுநர் பதவி கூடாது  என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் கூட்டாட்சி அமைப்பில் நாட்டிற்கு ஒரு  ஆளுநர் பதவி உள்ளது. எனவே அதன்படி தொடர வேண்டும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல், தனி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு வந்த அனைத்து அரசுகளும் அதை தொடர்ந்துள்ளன. தனி ஊழியர் நியமனம் 5 ஆண்டுகள் ஆகும். 2 வருடங்களுக்கு என்று சொல்வது தவறானது. தனி ஊழியர் ஓய்வூதியம் குறித்து ஆளுநருக்கு இப்போது தகவல் கிடைத்திருக்கலாம். ஆளுநரிடம் விசயங்களைப் புரிந்து கொள்ளச் சொல்வதில் தவறில்லை என்றும், இது தொடர்பான முடிவை மாற்றப் போவதில்லை என்றும் கொடியேரி விளக்கமளித்தார். விசயங்களைக் கவனிக்க தனிப்பட்ட ஊழியர்கள் தேவை. அதனால்தான் நகரசபை தலைவர்களுக்கு தனி உதவியாளர் (பி.ஏ) வழங்கப்படுகிறது. ஆளுநர் தவறான கருத்தை கூறியபோதெல்லாம் அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துள்ளது. அந்த நிலை தொடரும் என கொடியேரி கூறினார்.