states

img

பள்ளிப் பாடப்புத்தகங்கள் காவிமயமாக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தில் பள்ளிப்பாடப்புத்தகங்கள் காவிமயமாக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் நாவலாசிரியரான தேவனூர் மகாதேவா அவர்களும், இடதுசாரி எழுத்தாளர் ஜி.ராமகிருஷ்ணா அவர்களும் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்துவரும் தங்களுடைய பாடங்களை நீக்கிவிடுமாறு கோரியிருக்கிறார்கள்.

ஸ்ரீநாராயணகுரு, தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் பல்வேறு முற்போக்கு எழுத்தாளர்களின் பாடங்களை நீக்கியிருப்பதுடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அமைத்த கேசவ் பலிராம் ஹெட்கேவார் பேசிய பேச்சு பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருப்பதையும் கண்டித்து இவ்வாறு அவர்கள் கோரியிருக்கிறார்கள்.

இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்திருப்பது, “கல்வியை அழித்துவிடும்” என்று கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கூறியிருக்கிறார்.

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஹெட்கேவார், “யார் ‘ரோல் மாடலா’க இருக்க முடியும்?” என்று ஆற்றிய உரை இடம்பெற்றுள்ளது. இதே புத்தகத்தில்தான் மகாதேவா மற்றும் ஜி.ராமகிருஷ்ணா ஆகியோரின் பாடங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால்தான் கொதித்துப்போய் மகாதேவாவும், ஜி.ராமகிருஷ்ணாவும் இவ்வாறு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

எல்.பசவராஜு, ஏ.என்.மூர்த்தி ராவ், (கொல்லப்பட்ட இதழாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் தந்தையான) பி.லங்கேஷ் மற்றும் சரா அபுபக்கர் ஆகியோரின் பாடங்களை நீக்கியிருப்பவர்களுக்கு கன்னட மொழியைப் பற்றியோ, கன்னடக் கலாச்சாரத்தைப்பற்றியோ எந்தவித அறிவும் கிடையாது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஜி.ராமகிருஷ்ணா தன்னுடைய அறிக்கையில், “இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்திருப்பது, சிறுகுழந்தைகளின் மனதில் பாடப்புத்தகங்கள் மூலமாக விஷத்தை விதைத்திடும் வேலையாகும்” என்றும், “கல்வியின் மூலம் அரசியல் விளையாட்டை மேற்கொள்வது மன்னிக்க முடியாததாகும்” என்றும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்திருப்பதை பாஜக சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஏ.எச். விஸ்வநாத் என்பவரும் கண்டித்திருக்கிறார்.

“இது ஒரு மிகவும் ஆபத்தான விஷயமாகும். நான் ஆரம்பக் கல்வி அமைச்சராக இருந்திருக்கிறேன். இவ்வாறு பாடப்புத்தகங்ளை மாற்றியிருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மனவேதனையைத் தருகிறது. அரசியல் போராட்டங்களுக்கான ஒன்றாக பாடப்புத்தகங்களைக் கருதக்கூடாது,” என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

“ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பாடப்புத்தகங்களைத் திருத்தக் கூடாது. இன்றையதினம் கல்வி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வியையும் கலாச்சாரத்தையும் அழிப்பதென்பது நாட்டையே அழிப்பதற்குச் சமமானதாகும்,” என்று விஸ்வனாத் கூறியிருக்கிறார்.

“இவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கும் நபரான ரோகித் சக்ரதீர்த்தா யார்? அவர் ஒரு பேராசிரியரா? இல்லை. அவர் ஒரு சங் பரிவாரத்தைத் சேர்ந்த நபர் என்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது,” என்று விஸ்வனாத் மேலும் கூறியிருக்கிறார்.

(ந.நி.)

;