states

img

ஒடிசா: காலில் விழுந்து வணங்காத மாணவர்களை தாக்கிய ஆசிரியை பணியிடை நீக்கம்!

ஒடிசா மாநிலத்தில் காலில் விழுந்து வணங்காத 31 மாணவர்களை தாக்கிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் கண்டடியுலா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், தனது காலில் விழுந்து வணங்காத 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 31 மாணவர்களை சுகந்தி கர் என்ற ஆசிரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு மாணவருக்கு எலும்பு முறிவும், ஒரு மாணவி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில மாணவர்களுக்கு கைகளிலும், பின்புறத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை ஆசிரியர் பூர்ணசந்திர ஓஜா, வட்டார கல்வித்துறை அதிகாரி (BEO) பிப்லாப் கர், கிளஸ்டர் வள மைய ஒருங்கிணைப்பாளர் தேபாஷிஷ் சாஹு மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியை மாணவர்களை தாக்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை  இடைநீக்கம் செய்து வட்டார கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார்.