கொல்கத்தா:
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றுவதும், கட்சிக் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிப் பறக்க விடுவதும் பாஜக-வினர் வழக்கமாக செய்யும் காரியங்கள் ஆகும்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்பதுடன், சமீப காலம்வரை ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதில்லை என்பதால், அவர்களுக்கு தேசியக் கொடியை எவ்வாறு ஏற்றுவது என்பது கூட தெரியாது. அதனை தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.
அந்த வகையில்தான், மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி, அதனை அவமதித்துள்ளார்.மேற்கு வங்கத்திலுள்ள பாஜக தலைமைஅலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போதுதான், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தற்போதுகடும் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. தேசியக் கொடிக்கு மதிப்பு கொடுத்து, அதனை முறையாக ஏற்ற முடியாதவர்கள் இந்த நாட்டையோ அல்லது ஒரு மாநிலத்தையோ கூட ஆளத் தகுதியற்றவர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது உண்மைதான் என்றும், தவறை உணர்ந்தவுடன், உடனடியாக மூவண்ணக் கொடியை கீழே இறக்கி, அதனை மீண்டும் சரியாக ஏற்றி பறக்கவிட்டேன் என்றும் திலீப் கோஷ் சமாளித்துள்ளார்.