ஆக்ராவில் பசுக்களைக் கொன்று, ராம நவமி ஊர்வலத்தின் போது மதக் கலவரத்தை உருவாக இந்து மகாசபா நிர்வாகிகள் முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆக்ராவில் உள்ள கௌதம் நகர் பகுதியில், கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது, பசுக்கள் கொல்லப்பட்டதாக ஜித்தேந்திரா குஷ்வாஹா என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அப்பகுதியை சேர்ந்த முகமது ரிஸ்வான், முகமது நக்கீம் மற்றும் முகமது சானு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதை அடுத்து, அவர்களை கைது செய்யக்கோரி இந்து மகா சபா அமைப்பினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனை அடுத்து, இம்ரன் குரேஷி மற்றும் சானுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, பசுக்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அவர்கள் போகவில்லை என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, புகார் அளித்த ஜித்தேந்திரா, அகில் பாரத் இந்து மகாசபா அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சாய் ஜாட், நக்கீம், பிஜ்ஜோ, ரிஸ்வான் உள்ளிட்ட சிலர் திட்டமிட்டு பசுக்களைக் கொன்று, ராம நவமி ஊர்வலத்தின் போது மதக் கலவரத்தை உருவாக முயன்றது அம்பலமானது. மேலும், இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.