states

img

ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்... அரசு மருத்துவரை சஸ்பெண்ட் செய்த திரிபுரா மாநில பாஜக அரசு...

அகர்தலா:
மருத்துவ உபகரணம் வாங்குவதற்கான டெண்டரில் நடந்த ஊழலை கேள்வி கேட்டதற்காக, அரசு மருத்துவர் ஒருவரை திரிபுரா மாநில பாஜகஅரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

திரிபுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோ மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அனிந்திதா பவுமிக், சமூகவலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார்.அந்த வகையில், கடந்த மார்ச் 24 அன்றுமுகநூலில் ஒரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், மருத்துவமனைக் கான மருத்துவ இயந்திரம் ஒன்றை முறையான டெண்டர் வெளியிட்டு வாங்காமல், தன்னிச்சையாக தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்திருப்பதை குறிப்பிட்டிருந்தார். இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதே அவரின் குற்றச்சாட்டாகும்.

ஆனால், இதற்காக அனிந்திதா பவுமிக்கை, திரிபுரா அரசு மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர் அனிந்திதா, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் எனது முகநூல் பதிவில் மருத்துவமனையைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், எனது பதிவை நீக்கச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் அளித்தது, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை மிரட்டியதோடு, எனது தந்தையிடமும் இது குறித்துத் தெரிவித்து அவரை வைத்தே எனது பதிவை நீக்கவலியுறுத்தியது. ஆனாலும் நான்மறுத்து விட்டேன்” என்று தெரிவித் துள்ளார்.அனிந்திதா பவுமிக், அரசு மருத்துவர் என்பது மட்டுமன்றி, திரிபுரா பாஜகஎம்எல்ஏக்களில் ஒருவரான அருண் சந்திர பவுமிக் என்பவரின் மகள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சி வந்தது முதலே கருத்துச் சுதந்திரம் போய்விட்டது
“திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக அரசு அமைந்ததில் இருந்தே கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய இடதுசாரிகளின் ஆட்சியின் போதும் அரசை விமர்சித்ததாக என்மீது வழக்குகள் போடப்பட்டன. ஆனால் எனக்கு எனது நிலையை எடுத்துச் சொல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசு என்னை எனது சமூக வலைத்தள பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்துள்ளது” என்று மருத்துவர் அனிந்திதாபவுமிக் தனது வேதனையை கொட்டியுள்ளார்.