தெலுங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதியம் 2 மணியளவில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 7க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பல மணி நேரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பாதுகாப்பு மேலாளர் ஜெயராஜ், சுரங்க உதவி மேலாளர் சைதன்யதேஜா, ஒப்பந்த தொழிலாளி தோட்டா ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேரை உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட 3 பேரின் உடலையும் சிங்கரேணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக ஒரு ஓவர்மேன், ஒரு ஆப்ரேட்டர், ஒரு சுரங்கத் தொழிலாளி உள்பட 4 பேரை உயிருடன் மீட்புக்குழுவினர் மீட்கப்பட்டனர்.