states

நிகரற்ற தலைவர் ; மார்க்சிய அறிஞர்

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு  உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் புகழஞ்சலி

புதுதில்லி, செப்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி  மறைவையொட்டி, உலகின் பல நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடமிருந்து இரங்கல் செய்திகள் வந்துள்ளன. சோசலிச நாடுகளின் அரசுத் தூதர்களும், பாலஸ்தீனம், ரஷ்யா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் அரசுத் தூதர்களும் கட்சியின் தலைமையகத்திற்கு வந்து, தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். இவர்கள் அனைவருமே தோழர் சீத்தாராம் யெச்சூரி சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தினை வளர்த்தெடுத்திட அளித்திட்ட பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்கள்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் தோழர் சீத்தாராம் யெச்சூரியை ஒரு நிகரற்ற தலைவர் (an outstanding leader) என்றும், மார்க்சிய சித்தாந்த அறிஞர் (a Marxist theorist) என்றும் வெகுவாகப் புகழ்ந்திருக்கிறது.   “இடதுசாரி சக்திகள்;  சோசலிச இயக்கம் மற்றும் இந்தியாவின் சமூக முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்திட குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்” என்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது. மேலும் இந்திய சீன நட்புறவு மேம்பட அவர் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நினைவு கூர்ந்தும், கட்சிக்கும், அவருடைய குடும்பத்திற்கும் தன் இரங்கல்களையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

நிகரகுவா

நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஓர்டேகா, மார்க்சிஸ்ட்  கட்சியின் மத்தியக்குழுவிற்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், “தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்த மகத்தான தோழர் அவர். போராடும் நம் அனைவரின் அன்புச் சகோதரராக விளங்கிய தோழருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சஹராவி குடியரசு

சஹராவி அரபு ஜனநாயகக் குடியரசின் அயல்துறை அமைச்சர் முகமது சிடாட்டி, போலிசாரோ முன்னணி (Polisaro Front) சார்பாக அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், “சமூக நீதிக்காகவும், சர்வதேச ஒருமைப்பாட்டுக்காகவும், மக்களின் சுயசார்பு உரிமைகளை முன்னெடுத்துச் சென்றிடவும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அவருடைய பணிகள் என்றென்றும் அழிக்கமுடியாதவகையில் விளங்கும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.   சீன மக்கள் குடியரசு சார்பாக சீன மக்கள் குடியரசின் தூதர் சூ ஃபைஹாங் (Xu Feihong) அனுப்பியிருந்த  இரங்கல் செய்தியில் தான் தோழர் சீத்தாராம் யெச்சூரியுடன் மேற்கொண்டிருந்த சந்திப்புகளை நினைவு கூர்ந்தார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சி

கியூப கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எமிலியோ லோசாடா கார்சியா அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைமைக்கும், கட்சியின் அனைத்து  உறுப்பினர்களுக்கும், தோழர் சீத்தாராம் யெச்சூரியின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த  இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டிருப்ப துடன், இந்தியாவில் கியூப ஒருமைப்பாட்டு இயக்கத்தைக் கட்டி எழுப்பிட யெச்சூரி ஆற்றி யுள்ள அளப்பரிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்துள்ளார். கியூபா தூதரகம் சார்பில் அபெல் தேஸ் பாய்க்னே நேரில் வந்து அஞ்சலிசெலுத்தினார். இதே போன்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி, சைப்ரஸ் உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி,  பெல்ஜியம் தொழிலாளர் கட்சி, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பி.ஒலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ மையம்), இலங்கை ஜனதா விமுக்தி பெரமுன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி, பாகிஸ்தான் அவாமி தொழிலாளர் கட்சி, வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி, வங்கதேச தொழிலாளர் கட்சி, ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி, வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி,  மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசிலியன் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி, அயர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி, ஜெர்மனி கம்யூனிஸ்ட் கட்சி, இத்தாலி கம்யூனிஸ்ட் ரீஃபவுண்டேஷன் கட்சி, ஈரான் தூடே கட்சி, வங்க தேச புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் முதலான கட்சிகளும் இரங்கல் செய்திகள் அனுப்பியுள்ளன.  (ந.நி.)