சென்னை, ஜன. 10 - புதிய நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகள், சமூகநீதியைக் காப்பதாகவும் அமைய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. கோதண்டம், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். சிவகுமார் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தாண்டு மட்டும் 10 நீதிபதிகள் ஓய்வு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 75 நீதிபதி பணி இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் இந்த ஆண்டு 10 நீதிபதிகள் வரை ஓய்வுபெறும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரை செய்ய இருக்கிறது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையும், நியமிக்கப்படக் கூடிய நீதிபதிகள் நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
முன்னேறிய சாதியினருக்கே தரப்படும் முன்னுரிமை
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி கள் நியமனத்தில் உயர்சாதியை சேர்ந்த வர்களுக்கே அதிகப்படியான முன் உரிமை தரப்படுகிறது என்கிற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டுக் கணக்கின் படி, உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில் முன்னேறிய சாதி யைச் சேர்ந்தவர்கள் 34 சதவிகிதமாக உள்ள னர். இதில் இதுவரை பெரிய மாற்றம் இல்லை. கடந்த 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஜூலை 2023 வரை நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளில் நான்கில் 3 பேர் உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல், பழங்குடி, சிறுபான்மை, பெண்களுக்கு இடமில்லை இதில் பட்டியல், பழங்குடி பிரிவிலிருந்து 5 சதவிகிதம் பேர் கூட இல்லை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 11.92 சதவிகிதம் பேர், சிறுபான்மையினர் 5.6 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த பிரிவு மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாகும். அதே போன்று பெண் வழக்கறிஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தொழிலில் ஈடு பட்டு வரும் நிலையில் உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் போதிய அளவிற்கு பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படாத சூழலே உள்ளது.
சமூகநீதிப் பார்வை கொலீஜியத்திற்கு அவசியம்
இந்திய சமூக அமைப்பில் சாதிய ரீதி யான, மத ரீதியான, பாலின ரீதியான பாகுபாடு களும், ஒடுக்குமுறைகளும் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அனைத்துப் பிரிவினரும் அரசின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்பது உத்தரவாதப்படுத்தப்படுவதே சரியான ஜனநாயக நடைமுறையாகும். கொலீஜியம் சமூகநீதிப் பார்வையோடு புதிய நீதிபதிகளை பரிந்துரைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு சமூக, ஜனநாயக அமைப்புக்கள் சார்பில் எழுந்துள்ளது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிடங்கள் அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவிகள் என்பதால் அதற்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதால், சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனங் கள் இருக்க வேண்டும் என்கிற ஜனநாயக கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.
நம்பகத்தன்மையை பெற வேண்டும்
நீதியை வழங்குபவர்களிடையே தங்களை பற்றிய பிரதிபலிப்பை காணும் போது தான் நீதித்துறையை மக்கள் நம்பத் தொடங்கு வார்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒருமுறை நீதிபதிகள் நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அதன்படி ஜனநாயகத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அதிகாரத்தில் பங்கேற்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியதாக நீதித்துறை இருப்பதன் மூலமே சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும். வெளிப்படைத்தன்மையுடன் நியமனங்கள் அமைய வேண்டும் உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்வு செய்யக்கூடிய கொலீஜியம் சுதந்திர மாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நீதிபதிகள் நியமனத்தில் செயல்பட வேண்டும். கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்படும் புதிய நீதிபதிகள் நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை காக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். சமூகநீதியைக் காக்கக்கூடிய வகையிலும் புதிய நீதிபதிகளுக்கான பரிந்துரை இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியத்தை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.