ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
புதுதில்லி, ஜன. 10 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை யன்று 86 ரூபாய் என்ற அளவிற்கு இறங்கி யுள்ளது. வியாழனன்று ரூபாய் மதிப்பானது, அதன் முந்தைய நாள் நிலவரத்திலிருந்து 17 காசுகள் சரிந்து, 85 ரூபாய் 86 காசுகளாக இருந்தது. இது வெள்ளிக்கிழமையன்று மேலும் 14 காசுகள் சரிந்து 86 ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால், பங்குச் சந்தைக் குறியீடு களான நிப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. “வெளிநாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தை களில் எதிர்மறை உணர்வு ஆகியவை இந்திய நாணயத்தின் மதிப்பைக் குறைக்கின்றன” என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் கோர விபத்து: 4 தொழிலாளர்கள் பலி
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஹைதராபாத் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஓய்வு எடுப்ப தற்காக லாரியை நிறுத்தி வைத்து, ஓட்டுநர் ஓய்வு எடுத்தார். அப்பொழுது ஒடிசாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத் திலேயே 4 தொழிலாளர்கள் உயிரிழந்த னர். படுகாயமடைந்த 17 தொழிலாளர் கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 9 தொழிலாளர் களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
“சனாதனம் மீது மரியாதை கொண்டவர்கள் மட்டுமே கும்பமேளாவுக்கு வர வேண்டுமாம்”
உத்தரப்பிரதேசத்தின் அலகா பாத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி துவங்குகிறது. கும்பமேளா விழா அலகாபாத், ஹரித்வார் (உத்தரகண்ட்), உஜ்ஜைனி (மத்தியப்பிரதேசம்), மற்றும் நாசிக் (மகாராஷ்டிரா) ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. அதிக மக்கள் கூடும் இடமாக இருப்பதால் அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளா தான் பிரபல மாக உள்ளது. ஆனால் இந்த மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் எவரும் கடைகளை நடத்தக் கூடாது என துறவிகளின் சபைகளான அகாடாக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் மகா கும்பமேளாவில் முஸ் லிம்களுக்கு இடமில்லை என்ற பேச்சுக் களும் எழுந்தன. இந்நிலையில், தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரப்பிர தேச முதல்வர் ஆதித்யநாத்திடம் கும்ப மேளா திடலில் முஸ்லிம்களின் அனுமதி குறித்த அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், “தம்மை ஒரு இந்தியன் என எண்ணுபவர்களும், சனாதனம் மீது மரி யாதை கொண்டவர்களும் கும்பமேளா வுக்கு வரலாம். முஸ்லிம் மக்கள் தங்கள் கும்பமேளாவில் பங்கேற்பது ஒன்றும் பிரச்சனை இல்லை. கலாச்சாரத்தின்படி கும்பமேளாவின் சங்கமத்தில் புனித நீராடல் செய்ய விரும்பி வந்தால் எங்க ளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என மழுப்பலாகக் கூறினார்.
பாஜக ஆளும் உ.பி.,யில் கொடூரம் 3 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் அடித்துக் கொலை
லக்னோ பாஜக ஆளும் மாநிலங்கள் குற்றச் சம்பவங்களின் கூடாரம் என்பது நாடறிந்த விஷயம் ஆகும். இந்த கூடாரத்தின் தலைமையகமாக உத்தரப்பிர தேச மாநிலம் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங் கள் இல்லாத நாட்களே இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய நகரான மீரட்டில் 5 பேர் அடங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை யில் இருந்து காணாமல் போனதாக அண்டை வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காணாமல் போயிருந்த குடும்பத்தினரின் பூட்டியிருந்த வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த போது 5 பேரும் சடலங்களாகக் கிடப்பது தெரிய வந்தது. பெண் குழந்தைகளின் தலையில் பலத்த காயம் உயிரிழந்தவர்களின் 3 பெண் குழந்தை களும் (10 வயதிற்குட்பட்டவர்கள்) பெட்டிக் குள் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உயிரிழந்து கிடந்த 5 பேரின் தலையிலும் பலத்த காயம் இருப்பதும் தெரியவந்தது. தலையில் பலமாக தாக்கியதால் 5 பேரும் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை விசார ணையில் தெரியவந்துள்ளது. உடற்கூறாய்வுக்காக 5 பேரின் உடல் களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அறிக்கை வெளிவந்தவுடன்தான் உண்மை தெரிய வரும் என்று மீரட் மாவட்ட கண்காணிப் பாளர் கூறியுள்ளார். இரக்கமற்ற கொலை இந்த கொடூர கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது போல பலத்த காயங்கள் ஏற் பட்டுள்ளன. விரோதம், திருட்டு எதுவென்றாலும் சரி 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகளின் தலை நசுங்கும் அளவிற்கு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரக்கமற்ற கொலையாகும். ஆனால் இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மனித உரிமைகள் ஆணையம் அமைதி காப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீமானுக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
சென்னை,ஜன.10- தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பெரியார் பேசியதாக உண்மைக்கு புறம்பாக, பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, சமத்துவம், பெண் சுதந்திரம் குறித்து எந்தவித நவீன சாதனங்களும் இல்லாத காலத்தில் தன்னுடைய எழுத்து ,பேச்சு, மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று பரப்புரை செய்த பெரியார். பெரியார் எழுதி இருப்பதாக சீமான் குறிப்பிட்டிருக்கக் கூடிய பேச்சு எந்த இடத்திலும் விடுதலை நாளேட்டில் இடம் பெறவில்லை என்பதை,வரலாற்று ஆவணங்கள் நிரூபித்துள்ளன. சீமானின் இந்த பேச்சு தமிழகப் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும், ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சீமான் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பணம் குறித்து நிதி அமைச்சர் விளக்கம்
சென்னை, ஜன.10- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏன் ரூ.1000 பணம் வழங்கப்படவில்லை? என்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை. இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடு கட்டப்படுகின்றன. இந்த காரணங்களால் தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை.” என்று தெரிவித்தார்.
முன்னாள் எம்எல்ஏவை விடுவித்த உத்தரவு ரத்து
சென்னை,ஜன.10- சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என வேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
3 மடங்காக உயர்ந்த விமானக் கட்டணம்
மதுரை,ஜன.10- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு விமானக் கட்டணம் 3 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டா டப்படும் நிலையில், சென்னையில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்க விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள் ளன. சென்னை-மதுரைக்கு வழக்கமான நாட்களில் விமானக் கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படும்.
டங்ஸ்டன் போராட்ட வழக்குகளை ரத்து செய்ய பரிசீலனை
முதல்வர் ஸ்டாலின் உறுதி
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது 5,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கோரிக்கை வைத்தார். பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில உரிமையைப் பாதிக்கும் இத்திட்டத்தை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்தது குறித்து சுட்டிக்காட்டி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின் மாதாந்திர மின்கட்டண வசூல்
அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
தேர்தல் வாக்குறுதியின்படி மாதாந்திர மின்கட்டண வசூல் முறையை அமல்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது நடைபெற்றுவரும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிந்தவுடன் மாதாந்திர கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என்றும், தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகக் குறைவாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளது
முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்தார். பதிலளித்த முதல்வர், இது ஒன்றிய அரசின் அதிகார வரம்பில் உள்ள விஷயம் என்றும், பீகார் மாநில அரசின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டி, தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.
நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்
முதல்வர்-எதிர்க்கட்சித் தலைவர் இடையே பரபரப்பு
சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீட் விலக்கு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு பெறப்படும் என்று கூறியதாகவும், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு அமலுக்கு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
உள்ளாட்சி : தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு எதிர்ப்பு
எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் (ஜனவரி 5) முடிவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு காங்கிரஸ், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.
போராட்ட அனுமதி விவகாரத்தில் சட்டமன்றத்தில் பரபரப்பு
முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையே வாக்குவாதம்
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அனுமதியற்ற இடங்களில் போராட்டம் நடத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது அதிமுக ஆட்சிக் காலத்திலும் நடந்ததே என்றும் சுட்டிக்காட்டினார். பேரவைத் தலைவர் அப்பாவு, நேரலை ஒளிபரப்பு தொழில்நுட்பக் கோளாறால் மட்டுமே தடைப்பட்டதாக விளக்கமளித்தார்.