states

img

ஐஐடி களில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள் - கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

ஐஐடி களில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள் என்று கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, மேற்குறித்த குழுவின் அறிக்கையை இணைத்து தங்களது அமைச்சகம் தந்திருந்த ஒரு பதிலை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்க நேர்ந்தது. அந்த அறிக்கை தனது திட்டம் "அ" (A) வின் படி ஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை மொத்தமாக ரத்து செய்வதற்கு பரிந்துரை அளித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இக்குழுவின் மற்ற பரிந்துரைகளும் சமூகநீதிக் கொள்கைகளை, ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கான அரசின் சமூகப் பொறுப்பை புறம் தள்ளும் பிற்போக்குத்தனத்தைக் கொண்டதாகவே உள்ளன.

இந்த அறிக்கை மொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டியது. மேலும் குப்பைத் தொட்டியில் வீசியெறியப் வேண்டியதாகவும் உள்ளது. அந்த அறிக்கையின் முக்கியமான பரிந்துரைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப் பரிந்துரைகளின் உள்ளடக்கமும், தொனியும் இந்திய சமூகத்தின் சமூக யதார்த்தங்களை சிறிதளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.

நான் இக் குழு ஆய்வு செய்து அளித்துள்ள பரிந்துரைகளில் நான்கு அம்சங்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

1) திட்டம் அ (Plan A) என அக்குழு அளித்துள்ள பரிந்துரை, ஐ.ஐ.டி பேராசிரியர் பணி நியமனங்களில் உள்ள இட ஒதுக்கீடை முற்றிலும் கைகழுவச் சொல்கிறது. அறிக்கையின் வார்த்தைகளில்,

*"உலகின் மற்ற பெரும் கல்வி நிலையங்களோடு சீர் மிகு செயல்பாடு, தரம் மிக்க கல்வி, ஆய்வு, ஆசிரியப் பணி ஆகியவற்றில் போட்டியிடத் தக்க வகையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பான இலக்குகளை நிறைவேற்ற அழுத்தம் தருகிற முறைமை தேவைப்படுகிறது. அது குறிப்பான இட ஒதுக்கீடுகளாக அல்லாது பன்முகப் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிற பொதுவெளி பிரச்சாரம், இலக்கிடப்பட்ட பணி நியமனங்கள் ‌உள்ளிட்டவைகளாக இருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கிறோம்."*

மேலும் மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பிரிவு 4 ன் விதி விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலில் ஐ.ஐ.டி களையும் இணைத்து இட ஒதுக்கீடு வரம்பில் இருந்து அகற்றுமாறு அக் குழு பரிந்துரைத்துள்ளது.

இக் குழு தனக்கு ஒப்பளிக்கப்பட்ட வரம்பை மீறி உள்ளதாகவும், அக்குழு அறிக்கையின் தலைப்பான " மத்தியக் கல்வி நிறுவனங்கள் ( மாணவர் அனுமதி இடஒதுக்கீட்டுச் சட்டம் 2006) மற்றும் மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பதவிகளில் இடஒதுக்கீடு சட்டம் 2019) ஆகியவற்றை சரியானவகையில் அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு" என்ற நோக்கத்திற்கு எதிராகவும் செயல்பட்டுள்ளது எனவும் கருதுகிறேன். அறிவிக்கப்பட்டுள்ள நோக்கத்திற்கு முற்றிலும் எதிர் மாறான வகையில் அதன் பரிந்துரைகள் அமைந்திருக்கின்றன. இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கோட்பாடுகளை அக் குழு புரிந்திருக்க வில்லை என்பதோடு "சீர்மிகு செயல்பாடு" "தரம்" போன்றவற்றின் இலக்கணங்களை மனு ஸ்மிருதி அணுகலோடே அது முன் வைத்துள்ளது. அக் குழுவின் வாதங்கள், இந்த இலக்குகளை எட்ட இட ஒதுக்கீடு தடையாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. நான் பணிவோடு இங்கு குறிப்பிட விழைகிறேன். தடையாக இருப்பது ' சாதியே ' தவிர ' இட ஒதுக்கீடு' அல்ல. இதுவே மகத்தான சமூக சீர்திருத்த ஆளுமைகளான டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், ஜோதிபா புலே, அய்யங்காளி போன்றோர் தந்த வெளிச்சம். உண்மையில் சமூகத்தின் சீர் மிகு செயல்பாட்டிற்கும், தர மேம்பாட்டிற்கும் பெருமளவு மக்களைப் பங்களிக்கச் செய்திருக்கிற அரு மருந்தே இட ஒதுக்கீடு ஆகும்.

திட்டம் "ஆ" (Plan B) வும் இடஒதுக்கீட்டை சற்று மாறுபட்ட வடிவில் கை கழுவும் ஒரு முயற்சிதான். திட்டம் ‘ஏ’ கடுமையான எதிர்ப்பை சந்திக்கும் என்பதை அக் குழு அறிந்திருப்பதால், திட்டம் ‘பி’ என்ற தந்திரமான ஆலோசனையை அது முன்வைக்கிறது. "இடஒதுக்கீடு குறித்த சட்டங்களை நன்முறையில் அமலாக்குதல்" என்ற கமிட்டிக்குத் தரப்பட்டுள்ள வழிகாட்டுதலுக்கு எதிரானது என்பதால், திட்டம் B யும் நிராகரிக்கப்பட வேண்டியதுதான்.

திட்டம் B யில் கூறப்பட்டிருப்பது என்னவெனில்,

*"உதவிப் பேராசிரியர் அடுக்கு 1 மற்றும் 2 பதவிகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்".*

தொடர்ந்து வரும் பத்திகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கு இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று அறிக்கை மேலும் தெளிவாகக் கூறுகிறது.

எனவே படிப்படியாக நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதான் திட்டம் ‘பி’யின் உள்நோக்கமாக இருக்கிறது.

2) இடஒதுக்கீடுக்குரிய இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுதல் (De- reservation) குறித்த குழுவின் பரிந்துரை அதன் உண்மையான நோக்கத்தை மேலும் அம்பலப்படுத்துகிறது. அந்த அறிக்கை கூறுவதாவது,

*"ஓராண்டில் தகுதியான தேர்வர்கள் கிடைக்காவிடில், நிரப்பப்படாத SC/ST/OBC/EWS நிலுவை காலியிடங்களை, பணி நியமன அதிகாரம் படைத்தவர்களின், (அதாவது, அந்தந்த ஐஐடியின் ஆளுநர் பேரவை - Board of Governors) ஒப்புதலோடு பொதுப் பட்டியலுக்கு அடுத்த ஆண்டிலேயே மாற்றம் செய்யலாம்."*

இது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூக இடைவெளியை சரி செய்யும் ‘நிலுவைக் காலியிடம் எதிர் காலத்திற்கு எடுத்துச் செல்லப்படல்' (Carry forward of Back log vacancies) என்ற ஏற்பாட்டையே மொத்தமாக அழிப்பதற்கான அப்பட்டமான முயற்சியாகும் இது. 'இடஒதுக்கீடுக்குரிய இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுதல்' குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) வெளியிட்டுள்ள பல ஆணைகளுக்கும் எதிரானதாகும். இங்கு 'இடஒதுக்கீடுக்குரிய இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுதல்' அதிகாரம் ஐஐடியின் ஆளுநர் பேரவைக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு எஸ்.சி, எஸ்.டி தேசியக் ஆணையங்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும்; சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் ஒப்புதல் வேண்டும் என்று நடைமுறைகளை வகுத்துள்ள பல ஆணைகள் ஏற்கெனவே உள்ளன.

பட்டியல் சாதி, பழங்குடி மக்களுக்கு உரிய பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும் இந்த ஆணைகளின் பாதுகாப்பு நெறிகளை, கோட்பாடுகளை இக் குழு கருத்தில் கொள்ளவில்லை.

3) முனைவர் பட்டப்படிப்பு அனுமதிகளில் அதிக எண்ணிக்கையில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெறுவதை உறுதிசெய்ய ‘ஆய்வு உதவியாளர்’ பதவிகளை அறிமுகப்படுத்துவது என்பது மற்றொரு பரிந்துரை. மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல யோசனையாக இது தெரிந்தாலும், முனைவர் படிப்புகளில் போதிய அளவு பட்டியல் சாதி, பழங்குடியினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் பொறுப்பில் இருந்து ஐ.ஐ.டி களை விடுவிக்கவே அறிக்கை முன் மொழிகிறது. இது குறித்து அறிக்கை கூறுவது:

*‘இந்த மாணவர்களை முழுநேர படிப்பிற்கு ஐஐடிகள் தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது அவர்களது தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்கிற தேர்வு இருக்கும்’.*

மீண்டும், ‘தகுதி’ என்ற வாதம் அவர்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக இங்கு முன்வைக்கப்படுகிறது.

2020 மார்ச் 6 அன்று ராஜ்யசபாவில் தோழர் சோம பிரசாத் எம்.பி. (சிபிஎம்) எழுப்பிய கேள்விக்குத் தரப்பட்ட பதிலின் மூலம் தெரியவந்துள்ள முனைவர் பட்ட அனுமதிகளில் உள்ள மோசமான நிலைமையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

*கடந்த ஐந்தாண்டு காலத்தில் 23 ஐஐடிகளில், முனைவர் பட்ட அனுமதிகளில் 9.1 சதம் மட்டுமே பட்டியல் சாதியினர், 2.1 சதம் மட்டுமே பழங்குடியினர். இது முன்னவர்களுக்கான ஒதுக்கீடான 15 சதத்திற்கும், பின்னவர்களுக்கான 7.5 சத ஒதுக்கீட்டிற்கும் குறைவானது.*

கான்பூர் ஐஐடியில் முனைவர் படிப்பு சேர்க்கையில் பழங்குடியினர் பிரதிநிதித்துவம் வெறும் 0.6 சதம்தான். மெட்ராஸ் ஐஐடியில் பட்டியல் சாதியினர் பிரதிநிதித்துவம் 6.4 சதம் மட்டுமே.

4) பேராசிரியர் நியமனம் தொடர்பான இடஒதுக்கீட்டைப் பற்றி விரிவாகப் பேசி அதைக் கை கழுவ முனையும் அறிக்கை பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு பற்றி அடக்கி வாசிக்கிறது. இவ்விசயத்தில் இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றி அறிக்கை திருப்தி தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

*“பல ஐஐடிகளில் பல்வேறு மட்டங்களிலான (இளங்கலை, முதுகலை) படிப்புகளில் மாணவர் சேர்க்கை அரசாங்கம் அவ்வப்போது அளிக்கும் இடஒதுக்கீடு வழிகாட்டுதல்களின்படி இருப்பதை குழு கவனத்தில் கொள்கிறது“* என்கிறது.

ஐ.ஐ.டி களின் பல படிப்புகளில், குறிப்பாக முதுநிலைப் படிப்புகளில் விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது பற்றி ஏராளமான அறிக்கைகள் உள்ளன. எனவே குழு கூறுவது நம்பகமானதாக இல்லை. அதன் நோக்கங்கள் குறித்து ஐயங்களும் எழுகின்றன.

7000 பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது என அறிகிறேன். இந்த நிலையில் இட ஒதுக்கீடு கேள்விக்கு ஆளாக்கப் படுவது பெரும் அநீதி என்பதே அன்றி வேறொன்றும் இல்லை.

இந்தப் பின்னணியில்,

அ) இக் குழுவின் அறிக்கையை முற்றிலுமாக அரசு நிராகரிக்க வேண்டும்.

ஆ) ஐ.ஐ.டி களில் மாணவர் சேர்க்கை, பேராசிரியர் நியமனம் ஆகிய இரண்டிலும் இடஒதுக்கீடு அமலாக்கம் குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இ) சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட வேண்டும்; அவ்வாறு அமல்படுத்தாத, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, உரிய வழிகாட்டுதல்கள் ஐஐடிகளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின், இளைஞர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கங்களுக்கு உரிய கவனம் அளித்து அவர்கள் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.