திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக காவல்துறை மற்றும் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், அரசுத் தரப்பு, கோயில் தரப்பு, மனுதாரர்கள், தர்கா தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு ஆகியோரின் வாதங்கள் முன்வைக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் இரு நீதிபதிகள் அமர்வு இன்று வழக்கை ஒத்திவைத்தது. மேலும், எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளைக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
