states

ஈஷா மீதான வழக்குகளை விசாரிக்க தடையில்லை

சென்னை, அக். 18- கோவை ஈஷா யோகா மையம்  மீது நிலுவையில் உள்ள வழக்கு களை விசாரிக்க தமிழக காவல் துறைக்கு எந்த தடையுமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.  வழக்குகளை உடனடியாக சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தர விட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டிருப்பதாவது: கோவை ஈஷா யோகா மை யத்திற்கு எதிரான வழக்குகளை விசா ரிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. கோவை வடவள்ளியைச் சேர்ந்த வர் பேராசிரியர் காமராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவ ரது மகள்கள் லதா, கீதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்கச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர் என்றும், அங்கு அவர் களை மொட்டையடித்து தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாகவும், தாங்கள் பார்ப்ப தற்கு அனுமதி மறுப்பதாகவும், மகள்களை மீட்டுத்தர வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தின் மீதான முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்வி களை தொடுத்தது. அந்த மையத்தின் மீதான மொத்த வழக்குகளையும் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பல பெண்கள் மாயமாகி உள்ளனர். இந்த விவகாரத்தில் ஈஷா தரப்பில் கூறப்படும் அனைத்தும் பொய்யானவையாகும். இந்த மையத்தின் மீது பாலியல் வன்முறைகள் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகள் தற்போது வரையில் விசாரணையில் உள்ளது. குறிப்பாக ஈஷா யோகா மைய வளாகத்திற்குள் தகன மேடை ஒன்றும் உள்ளது. ஆன்மீக செயல்பாடு நடக்கும் இடத்தில் இதுபோன்றவை எதற்கு என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது என பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளது. இறுதியாக இம்மனுவினை விசாரித்த  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டப்படி விசாரிக்க மாநில காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை விசாரணையைத் தொடரலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. ஈஷா யோகா மையத்தின் மீது நில அபகரிப்பு,  போதைப்பொருள் பயன்படுத்துவது, வளாகத்தில் நடைபெற்ற மர்மமான கொலைகள், பாலியல் வன்முறைகள் என அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் ஏற்கனவே பலரால் எழுப்பப்பட்டுள்ளன. இதன் மீதான வலுவான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  தற்போது உச்சநீதிமன்றம் ஈஷா யோகா மையத்தின் மீதான புகார்களை விசாரிக்க மாநில அரசிற்கும், காவல்துறைக்கும் தடையில்லை என்று உத்தரவிட்ட பின்னணியில், ஈஷா யோகா மையத்தின் மீதான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்திட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமெனவும், இவ்வழக்கினை நேர்மையாகவும் துரிதமாகவும் விசாரித்து உரிய  சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.