states

ஒரே பில் போட வக்கில்லை; ஒரே தேர்தல் எப்படி நடத்துவீர்கள்? - சு. வெங்கடேசன் எம்.பி.,

திருமதி. வானதி சீனிவாசன் அவர்களே!  கருப்புப் பணத்தை ஒழிக்கவே “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்று நீங்கள் சொல்லும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம், கருப்பு பணத்தை ஒழிக்கவே பணமதிப்பு நீக்கம் என்று கருப்புப் பண ஒழிப்பை காரணமாகச் சொல்லி கடந்த காலத்தில் நீங்கள் நிறைவேற்றிய நாடகங்களைக் கண்டு மக்கள் நகைத்துக் கொண்டிருப்பது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?   நேர விரயம் பற்றி வேறு பேசியுள்ளீர்கள். தமிழ்நாடு, கேரளாவில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த  முடிவதற்கு உங்கள் கட்சி இந்த  மாநிலங்களில் வளராததுதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் பேசுவது உங்களுக்குத் தெரியுமா?  உத்தரப் பிரதேசம், பீகாரில் எல்லாம் 7 கட்டங்கள் நடக்கிறதே! உங்களால் ஒரு கட்டம், இரண்டு கட்டமாக அங்கே நடத்த முடியாமல் போவதற்கு காரணம் யார் என்பதை உபி மக்கள் புரிந்து கொண்டதால்தானே உங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.  நிதி விரயம் என்று சில ஆயிரம் கோடிகளுக்கு கவலைப்படும் நீங்கள் கார்ப்பரேட் வரிகளை 10 ஆண்டுகளில் மொத்தம் 11 சதவீதம் குறைத்தீர்களே; அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு எத்தனை லட்சம் கோடிகள் என்று கணக்கு போட்டு சொல்லுங்களேன். வாரிசுரிமை வரி போட மாட்டேன், அம்பானி அதானி எல்லாம் “பாவம்” என்று அடம் பிடிக்கிற நீங்கள் இந்தியாவின் டாப் 100 ‘சூப்பர் ரிச்’ எனப்படும் மெகா கோடீஸ்வரர்கள் மீது வாரிசுரிமை வரி போட்டால் எவ்வளவு லட்சம் கோடி வரும் என்பதை கணக்கு போட்டுச் சொல்லுங்களேன்.  

தேர்தல் வெற்றி தோல்விக்காக நாங்கள் பேசவில்லை; ஒன்றியத்தில் ஒரு ஆட்சி வரலாம், போகலாம்; மாநிலங்களிலும் ஆட்சிகள் வரலாம், போகலாம்; மக்களின் நம்பிக்கையை இழக்கலாம். இரண்டு மட்ட தேர்தல்களுக்கான பிரச்சினைகள் வேறு. மக்களின் எதிர்பார்ப்புகள் வேறு. எதற்கு இயந்திர கதியாக கால்களை கட்டிப் போட முனைகிறீர்கள்? கூட்டாட்சிக் கோட்பாடு நீர்த்துப் போக குறுக்கு வழி தேடுகிறீர்கள்.  ஏன்? ஆறு ஆண்டுகளாக மக்களவையின் துணை சபாநாயகர் தேர்தலை நடத்தாத பாஜக மக்களாட்சியின் மகத்துவத்தையும், தேர்தலின் மகத்துவத்தையும் பற்றி ஆயிரம் பக்கத்துக்கு அறிக்கை கொடுக்கிறது.  இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!  ஜிஎஸ்டியை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே கட்ட தேர்தலுக்கு வந்து வழக்காடுகிறீர்கள்.  பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடிய வில்லை; இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள். ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜகவின்  தீய எண்ணத்தை இந்தியா முறியடிக்கும்.  அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு.