tamilnadu

மாநில அரசுகள் ஈர்க்கும் முதலீடுகள் - வாய்ப்பும் சவால்களும் சாம்சங் பிரச்சனையை முன்வைத்து ஒரு விவாதம் - க. கனகராஜ்

முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை குறித்து 1848 ஆம் ஆண்டு வெளியான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தோழர்கள் மார்க்சும் - ஏங்கல்சும் சுருக்கமாக ஆனால் முழுமையாக முன் நிர்ணயித்து கூறியிருக்கிறார்கள். அறிஞர் அய்ஜாஸ் அகமது குறிப்பிட்டிருப்பது போல கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கண்டுள்ள நிர்ணயிப்புகள் திடுக்கிடத்தக்க வகையில் உண்மையாக இருக்கின்றன. உதாரணமாக, “உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை அளித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலை பெற்றிருந்த தேசிய தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்த புதிய தொழில்களை நிறுவுவது நாகரீகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா எனும் பிரச்சனையாகி விடுகிறது”.

மாநில அரசுகளின் நிலை

தற்போது உலகமய சூழலில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனையும் இதுதான். பாரம்பரிய தொழில்கள் நசிந்துவிட்டன அல்லது காலத்திற்கு ஒவ்வாதவை ஆகிவிட்டன அல்லது போட்டியை சமாளிக்க முடியாமல் மூடப்பட்டு விட்டன. அதேசமயம், மாநில அரசுகளை பொறுத்தமட்டில் கல்வி வளர்ச்சியின் காரணமாக பல்வேறு படிப்புகளை முடித்துவிட்டு வரும் தன் குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கடந்த காலத்தில் திட்டக் கமிஷன் அனுமதி பெற வேண்டிய நிலையிலிருந்து மாறிவிட்டதால், தொழில்களை நிறுவுவதற்கு ஒரு சுதந்திரம் கிடைத்து விட்டதாக மகிழ்ந்த மாநில அரசாங்கங்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்கு கடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதேசமயத்தில், ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை செய்வதிலிருந்து விலகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே இருந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை தனியார்மயமாக்கிவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ஏதேனும் அந்நிய முதலீடுகள் வரும் என்றால் அவற்றை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யும் திருப்பணியையும் செய்து வருகிறார்கள். இந்தச் சூழலில் பொதுவாக மாநில அரசுகள் குறிப்பாக, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அதிலும் குறிப்பாக பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றில் நிகர சேர்க்கை அதிகம் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலம் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பலனும் கிடைத்திருக்கிறது. அரசின் முயற்சி மட்டுமின்றி, தமிழகத்தின் உட்கட்டமைப்புகள், திறன்மிக்க தொழிலாளர்கள், தொழில் அமைதி ஆகியவை முக்கியமான காரணங்கள். அதேசமயம், மாநிலங்களுக்கிடையே எழும் போட்டியின் காரணமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏராளமான மானியங்களை மாநில அரசாங்கங்கள் முதலீடு செய்ய வருவோர்க்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, இரண்டு அம்சங்களை நாம் பார்க்கலாம்.

சிப் கம்பெனி ஏமாற்று

முதலாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க சென்று திரும்பிய பிரதமர் மோடி மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இந்தியாவிற்கு கொண்டு வர ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்தார். அதன்பிறகு தான் தெரிந்தது அந்த நிறுவனம் மைக்ரோ சிப் தயாரிக்கும் நிறுவனம் அல்ல. மாறாக, உதிரி பாகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மைக்ரோ சிப்பாக பொருத்துவது மற்றும் சோதனை செய்யும் தொழிற்சாலை தான் என்று. அதோடு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கான மொத்த செலவில் 50 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வழங்கும்; அதாவது, இந்தியர்களின் வரிப்பணம். 20 சதவிகிதத்தை குஜராத் மாநில அரசாங்கம் வழங்கும்; அதாவது அந்த மாநில மக்களின் வரிப்பணம். 30 சதவிகிதத்தை மட்டும்தான் மைக்ரான் நிறுவனம் வழங்கும். ஆனால் 100 சதவிகிதம் உரிமை மைக்ரான் நிறுவனத்திற்கு தான். அதாவது, முதலீட்டில் 70 சதவிகிதம் மானியம்.  இடம், நீர், மின்சாரம், வரி சலுகைகள் இனிமேல்தான் தெரிய வரும். 

திசை மாறிய கைடெக்ஸ்

இன்னொரு உதாரணம், தமிழ்நாடு சார்ந்தது. தமிழ்நாட்டில் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்த கையோடு கேரளாவிலிருந்து வந்த கைடெக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட முயற்சித்தது. அதன் தலைவர் எம். ஜேக்கப் தமிழ்நாடு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தான் தமிழகத்தில் முதலீடு செய்யப் போவதாக தெரிவித்திருந்தார். ஜூலை 2, 2021 கைடெக்ஸ் என்கிற அந்த நிறுவனத்தின் பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி தி இந்து நாளிதழ் தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்ததாக சொல்லியிருக்கிறது. அவற்றில் சிலவற்றை அது பட்டியலும் இட்டிருக்கிறது. மொத்த முதலீடு 3500 கோடியில் 1400 கோடி மானியமாக வழங்கப்படும். நிலம் சந்தை விலையில் பாதிக்கு வழங்கப்படும். பத்திரப்பதிவிற்கு முத்திரைக் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு. அந்த நிறுவனம் வாங்கும் கடனுக்கான வட்டியில் 6 வருடங்களுக்கு 5 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும், அந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டிற்கு செலவழிக்கும் தொகையில் 25 சதவிகிதத்தை மாநில அரசே வழங்கும். அந்த நிறுவனத்தில் பயிற்சிக்கு சேரும் ஒவ்வொரு ஊழியருக்கும் 6 மாத பயிற்சி காலத்திற்கு ரூ. 4000 முதல் ரூ. 6000 வரை மாநில அரசாங்கமே தரும். தரக்கட்டுப்பாட்டிற்கு ஆகும் செலவுகளில் 50 சதவிகிதம் மாநில அரசாங்கமே கொடுக்கும். 5 ஆண்டுகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும். முதலீட்டுக்கான ஜி.எஸ்.டி.யில் மாநிலத்தின் பங்கு முழுமையாக விட்டுக்கொடுக்கப்படும். முதல் 10 ஆண்டுகளுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 20 சதவிகிதத்தை மாநில அரசாங்கமே வழங்கும். இவையெல்லாவற்றையும் சேர்த்தால் அந்த நிறுவனம் முதலீடு செய்வதாக சொல்லப்படும் ரூ. 2100 கோடியில் பெரும்பகுதியை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இத்தனையும் கொடுத்த பிறகும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் கொள்ளை லாபம் மட்டும் தான் நோக்கம். தொழில் வளர்ச்சி என்பதோ, வேலைவாய்ப்பு என்பதோ அவர்களின் கவலையாக எப்போதும் இருந்ததில்லை. சொல்லப்போனால் இந்திய நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. அதனால், புதிய நிறுவனங்கள் வரும். வேலைவாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்த்ததாக ஒன்றிய அரசு குறிப்பிட்டது. அதில்கிடைத்த லாபம் முழுவதையும் அந்த நிறுவனங்கள் ஊகவணிகத்தில் முதலீடு செய்தார்களே தவிர புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை. வேலைவாய்ப்பையும் பெருக்கவில்லை. 

கைடெக்ஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில் தெலுங்கானா இதைவிட கூடுதலாக சலுகைகள் கொடுப்பதாகவும், அதனால் அந்த நிறுவனம் தெலுங்கானாவிற்கு சென்று விட்டதாகவும் இதேபோன்று மற்றொரு நிறுவனத்தையும் அங்கு ஆரம்பிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனால் எல்லாம் அங்கிருந்த சந்திரசேகர ராவ் அரசாங்கம் அதற்கு பின்பு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று விடவில்லை. மிக மோசமான தோல்வியையே தழுவியது. நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்டதோடு அதன் பலனை முழுமையாக அறுவடை செய்யப்போகிறோம் என்று முதலீடுகளை கவருவதற்காக ஏராளமான சலுகைகளை கொடுத்தவர் பிரிப்பதற்கு முன்பிருந்த ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவர் முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிற்கு வந்திருந்த பில்கிளிண்டன் தான் செல்லவிரும்பும் மாநிலங்களில் ஆந்திரத்திற்குதான் முதலிடம் என்று தெரிவித்தார். அதன்படியே ஆந்திராவிற்கும் சென்றார். அங்கு சென்ற போது திரு சந்திரபாபு நாயுடு அவர்களை நான் முதலமைச்சர் என்று அழைப்பதை விட ஆந்திரப்பிரதேசத்தின் செயல் அலுவலர் என்று அழைக்கவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். அவருக்கு அத்தனை புளகாங்கிதம். ஆனால், அடுத்து நடந்த தேர்தல் முடிவுகள் வரலாறு. இதேபோன்று தொழில்மயமாக்கும் முயற்சிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் மேற்கு வங்க அரசு எடுத்த நடவடிக்கையும் அதன் தொடர் விளைவுகளும் வரலாறாகியிருக்கிறது. 

கார்ப்பரேட் எதிர்பார்ப்பு

இதுஒருபுறம் இருக்க, அரசிடமிருந்து கூடுதலாக உதவிகளையும், மானியங்களையும் பெற்றுக் கொள்கிற நிறுவனங்கள் இப்போது தொழிலாளர் நலன்களிலும் கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, வேலை நேரத்தில் ஒரு கடும் நெருக்கடியை அந்நிய நிறுவனங்கள் கொடுத்ததையொட்டி கடந்தாண்டு ‘நெகிழ்வுத் தன்மையுடனான வேலை நேரம்’ என்கிற கோரிக்கையை வைத்து தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மசோதாவையும் நிறைவேற்றியது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் மற்றும் திமுகவின் தொழிலாளர் சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அதன் மீதான ஆட்சேபனையை தெரிவித்ததையொட்டி அரசாங்கம் அதை கைவிட்டது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் தற்போது சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கக் கூடாது என்று அடம்பிடிக்கும் செயல். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படையான உரிமைகளில் ஒன்று. ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்காக அதை சமரசம் செய்து கொள்வது அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் திமுக எடுத்த நிலைபாட்டிலிருந்து விலகுவதாகும்.

தமிழ்நாடு அரசு  கவனிக்க வேண்டியது…

தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் தமிழ்நாட்டை தொழில்மயமாக்குவதற்கு அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பாராட்டுக்குரிய பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்கிற கவலையே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மற்றும் நடவடிக்கையின்மைக்கு காரணமாக அமைந்திருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் தொழிலாளர் பிரச்சனையின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலை என்று எதையும் காண்பிக்க முடியாது. ஆனால், நோக்கியா போன்ற நிறுவனங்கள், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை மூடிவிட்டுச் சென்றன. அங்கு தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்குமான பிரச்சனை ஏதும் இல்லை. எனவே, ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கும் என்று சொன்னால் அல்லது வேறொரு மாநிலத்திற்கு சென்றால் பெரும் லாபம் கிடைக்கும் என்றால் தொழிலாளர்கள் எவ்வளவு அமைதியானவர்களாக இருந்தாலும் தொழிலாளர்களுக்காக, தொழில் அமைதிக்காக அரசின் விருப்பங்களுக்காக அவர்கள் நீடிக்க மாட்டார்கள். அதேசமயம், தொழிலாளர் பிரச்சனை இருக்கிறது என்பதற்காக லாபத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை யாரும் மூடிவிட்டு போனதாக சரித்திரமும் கிடையாது. எனவே, தமிழ்நாடு அரசாங்கம் தொழிலாளர்களின் அடிப்படையான உரிமைகள் பற்றிய பிரச்சனையில் சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியாக நிற்க வேண்டியது தமிழ்நாட்டின் நலன் சார்ந்தது. தமிழ்நாட்டின் நலனில் தொழிலாளர்களின் நலன் என்பது முக்கியமான பகுதி.