tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் - தஞ்சை மண்ணை சிவக்கச் செய்த செங்கொடியின் வீரப்புதல்வர்

வீரத்தின் விளைநிலமான தஞ்சைத் தரணி, காலமெல்லாம் உழைத்து ஓடாய்ப்போன ஏழை, எளிய, நலிவுற்ற மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்பி செங்கொடியால் சிவந்தது. தோழர் பி.சீனிவாச ராவ் காலந்தொட்டு தஞ்சை மண்ணை சிவக்கச் செய்த செங்கொடி இயக்கத்தின் வீரத்தளபதிகளுள் ஒருவர் தோழர் என்.வெங்கடாசலம்.  ‘என்.வி.’ என்று அனைவராலும் கொண்டாடப்படும் என். வெங்கடாசலம் தஞ்சை மாவட்டம், இன்றைய பூதலூர் வட்டம் ராயமுண்டான்பட்டியில் 1925 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 

இளம் கம்யூனிஸ்ட் 

1951ல் இளம் கம்யூனிஸ்ட் ஊழியராக தனது பணியை துவங்கிய என்.வெங்கடாசலம் தன் நேரம் முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்காகவே - குறிப்பாக அடித்தளத்தில் சமூக கொடுமைகளினால் மிதியுண்டு கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை தலை நிமிர வைப்பதற்காகவே செலவிட்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக இளம் வயது முதலே குமுறிக் கொண்டிருந்த அவர் அதை சமூக சீர்திருத்த பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் வர்க்கப் பிரச்சனையாகவும் கண்டார். சமூகநீதி கிடைப்பதற்கும், தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதற்கும் களப்போராட்டங்களை கட்சியின் வழிகாட்டுதலின்படி நடத்தினார். விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி குத்தகை விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்துப் போராடி வெற்றிகள் பல கண்டார். ஊராட்சித் தலைவராக  அவர் ஆற்றிய அரும் பணிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக உயர்த்தியது. வெண்டையம்பட்டி பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நிர்வாகத்தின் கீழ் அந்த பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. சுத்தமான குடிநீர் கிடைத்தது, ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது, சாலைகள் சீரமைக்கப்பட்டன, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு நாணய சங்கம், வானொலி மன்றம், சிறந்த நூலகம் உருவாக்கப்பட்டு அதில் சிறந்த நூல்களும் வாங்கி அப்பகுதி இளைஞர்களை படிக்க ஆர்வமூட்டினார்

நிலமற்ற ஏழைகளுக்கு...

நிலமற்ற ஏழைகளுக்கு தரிசு நிலங்களை சாகுபடி செய்வதற்கு எடுத்துக் கொடுத்தார். வீட்டு மனை இல்லாதவர்களுக்கு மனையும் கொடுக்கப்பட்டது. அவரது சீரிய பஞ்சாயத்து நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. நிலம், வீட்டு மனைகள் கிடைத்தது. மக்களை தன்மானத்துடன் தலைநிமிரச் செய்தது. ஆதிக்க சக்திகளுக்கு ஆத்திரமும் உண்டாக்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, கட்சி அலுவலகத்திற்கு வரும்போது தரையில் அமர்ந்தால் கடுமையாக சாடுவார். தானே எழுந்து சென்று கையைப் பிடித்துக் கொண்டு வந்து நாற்காலியில் உட்கார வைப்பார். தாழ்த்தப்பட்ட மக்கள் பொது குளத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க முடியாத நிலை இருந்தது. இந்த கொடுமைக்கும் முடிவு கட்டினார். இது போன்று காலில் செருப்பு போட்டுக்கொண்டு,தோளில் துண்டு போட்டு கொண்டு, சைக்கிளில் ஏறி சாதி இந்துக்கள் தெருவில் செல்ல முடியாது என்ற சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் களப்போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். அந்த கிராமத்தில் மட்டுமல்ல தஞ்சை, திருவையாறு வட்டங்கள் முழுவதும் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார்.  தோழர் என். வெங்கடாசலம், 1952 ஆம் ஆண்டு துவங்கி கால் நூற்றாண்டு காலம் தஞ்சை மண்ணில் மார்க்சிய லட்சியத்திற்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர். அவரின் அற்புத தொண்டும், பணியும் இளைய தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அதற்கான சக்தியாகவும் திகழும். விவசாயிகள் சங்கத்தையும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தையும், மாணவர், வாலிபர், மாதர் சங்கங்களையும் அவர் ஏராளமான கிராமங்களில் உருவாக்கினார். தஞ்சை நகரத்தில் பஞ்சாலை பனியன் தொழிற்சாலை களில் தொழிற்சங்கங்களை அமைத்தார். குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை இவரின் முன்முயற்சியால் கொண்டு வரப்பட்டது. அங்கு வசித்தவர்கள் ஆலைக்கு இடமளித்து உருவானது. இடம் கொடுத்தவர்களுக்கு தொழிற்சாலையில் வேலை மற்றும் குடியிருப்புகளும் பெற்றுக் கொடுத்தார்.  ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். மோசடிக்காரர்கள், லஞ்ச ஊழலில் திளைத்தவர்கள் அவரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். அந்த எதிரிகள் 1977 செப்டம்பர் 21ஆம் நாள் அவர் சோழகம்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தோழர் என்.வி.யை கடத்திச் சென்று படுகொலை செய்து எரித்து சாம்பலாக்கிவிட்டார்கள்.  எதிரிகள் அவர் தொலைந்தார் என்று தவறாக கணக்கு போட்டார்கள். அவர் தொலைந்து விடவில்லை என்பதை காலம் நிரூபித்தது. இன்று அவர் தியாகம் வித்தாகி விருட்சம் ஆக வளர்ந்து வருகிறது செங்கொடி இயக்கம். தியாகி என்.வி.என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- ஆர்.மனோகரன் 
சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்