ஒன்றிய உள்துறை இணை யமைச்சர் நித்யானந்தா ராய் வியாழனன்று, “வயநாடு நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு மாநில பேரிடர் மீட்பு நிதியில் (SDRF) போதுமான அளவு நிதி உள்ளது. தற்போது நடை முறையில் உள்ள எஸ்டிஎப்/என்டிஆர்எப் வழிகாட்டுதல்களின் கீழ் எந்த ஒரு பேரிடரையும் தேசிய பேரிடராக அறி விக்க எந்த ஏற்பாடும் இல்லை” என கேரளாவுக்கான சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸிடம் கூறினார். இந்நிலையில், ஒன்றிய அமைச்ச ரின் அலட்சியப் பேச்சிற்கு கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தற்போதைய சூழலில் கேரளா இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஒன்றிய அரசுக்கு தின மும் நினைவூட்ட வேண்டியுள்ளது. ஜூலை 30ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 பேர் உயிரிழந்தனர். குறைந்த அளவிலான பேரிடர்கள் சந்தித்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. ஆனால் கடுமையான நிலச்சரிவை எதிர்கொண்ட கேரளாவுக்கு உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. முதலில் கேரள மக்கள் மீதான பழிவாங்கும் மனநிலைக்கான காரணம் குறித்து ஒன்றிய அரசு விவரிக்க வேண்டும். பிரதமர் மோடி வயநாட்டுக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து சிறப்பு அறிவிப்புகள் ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ஒன்றிய அரசுக்கு பல நினைவூட்டல்களை கேரளா அனுப்பியது. ஆனால் இதுவரை சிறப்பு உதவிகள் குறித்தோ, வயநாடு பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிப்பதோ வெளியாகவில்லை. பேரிடர் ஏற்பட்டு பல மாதங்களுக்கு பின்பு ஒன்றிய அரசு தனது நிலைப் பாட்டை மட்டுமே அறிவித்துள்ளது. ஒன்றிய - மாநில அரசுகளின் உற வுகளுக்கு அடிப்படையாக இருக்கும் கூட்டாட்சி மதிப்புகளை நரேந்திர மோடி அரசு புறக்கணிக்கிறது. நிதி கூட்டாட்சி மற்றும் வரிவருவாயை சமமாக பிரிக்க வேண்டுமே தவிர மோதல் பின்னணி யில் வைத்து பார்க்கக் கூடாது. ஒன்றிய அரசின் இந்த முடிவு அரசியல் ரீதியானது ஆகும். அதனால் ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக கேரள மக்கள் ஒன்றி ணைய வேண்டும்” என அவர் கூறினார்.