states

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மோடி அரசிடம் கேட்க பாமகவுக்கு தைரியம் இருக்கிறதா?

சென்னை,டிச.25-  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க பாமகவுக்கு தைரியம் இருக்கிறதா? என்று அதன் தலைவர்  அன்புமணிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து  அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதற்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு அன்புமணி பேசுவாரா? இடஒதுக்கீட்டினையே அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசோடு அரசியல் ஆதாயத்திற்காக கைகோர்த்துக் கொண்டு நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தந்தையும் மகனும்! சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்லாது வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பையே எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள பாஜகவை ஆதரித்து அவர்களோடு கூட்டணியில் இருக்கும் அன்புமணி, தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேசி வருவது அரசியல் ஆதாயத்திற்காக அன்றி வேறென்ன.  அன்புமணி ராமதாசுக்கு உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவர் கை குலுக்கி உறவாடி கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசை பணியவைத்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஆனால், அதற்கு தைரியம் வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்பீர்களா? அதை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.