சென்னை,ஜன.10- தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பெரியார் பேசியதாக உண்மைக்கு புறம்பாக, பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி உள்ளதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, சமத்துவம், பெண் சுதந்திரம் குறித்து எந்தவித நவீன சாதனங்களும் இல்லாத காலத்தில் தன்னுடைய எழுத்து ,பேச்சு, மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று பரப்புரை செய்த பெரியார். பெரியார் எழுதி இருப்பதாக சீமான் குறிப்பிட்டிருக்கக் கூடிய பேச்சு எந்த இடத்திலும் விடுதலை நாளேட்டில் இடம் பெறவில்லை என்பதை,வரலாற்று ஆவணங்கள் நிரூபித்துள்ளன. சீமானின் இந்த பேச்சு தமிழகப் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும், ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக சீமான் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.