தமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியை திணிக்கும் மத்திய அரசின் முடிவிற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்
மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையின் பிரிவான பிரச்சார்
பாரதி அண்மையில் சமஸ்கிருத மொழி தொடர்பாக ஒருதலைபட்சமாக ஒரு
உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படும் பொதிகை
தொலைக்காட்சி உட்பட அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் இனி
கண்டிப்பாக சமஸ்கிருத மொழியில் செய்திகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் மொழி உரிமையை
பறிக்கும் செயலாகும் என்பதோடு, மாநில மக்களின் உணர்வுகளையும்
புறக்கணிப்பதாக உள்ளது.
மத்திய பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தொடர்ந்து சமஸ்கிருதம்
மற்றும் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு
வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சமஸ்கிருத ஆண்டு
கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருத
மொழிக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற
ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டினை நிறைவேற்ற முனைப்பான நடவடிக்கை
மேற்கொண்டு வருகிறது பாஜக அரசு. அதன் ஒரு பகுதியாக தற்போது சமஸ்கிருத
மொழியில் செய்திகள் வாசிக்கப்படுவது என்ற மத்திய அரசின் முடிவினை
கண்டிப்பதுடன், சமஸ்கிருத மொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும்
எனும் பிரச்சார் பாரதி அமைப்பின் உத்தரவை மத்திய அரசு உடனடியாக
தலையிட்டு நிறுத்த வேண்டுமெனவும், மக்கள் உணர்வுக்கு எதிராக, ஒரு
குறிப்பிட்ட மொழியை திணிக்கும் நடவடிக்கையை முற்றாக கைவிட
வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு
மத்திய அரசை வலியுறுத்துகிறது.