கரூர்,நவ.21- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதானி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் வியாழனன்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மெகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் முற்றிலும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது” என்று விளக்கினார்.