சென்னை, ஜன. 9 - துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநருக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள யுஜிசி-யின் புதிய விதி முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வியாழனன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த தீர்மானத்தை வரவேற்று, அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர் மாரிமுத்து பேசுகையில், “யுஜிசி யின் விதிமுறைகளானது, மாணவர் களுக்கு எதிரான பிரச்சனை மட்டுமல்ல இது, இதன் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசின் மறைமுக திட்டங்கள் பல உள்ளன. எனவே, அவற்றை சட்ட ரீதியாகவும் எதிர்க்க வேண்டும். மக்கள் மன்றத்திற்கும் கொண்டு சென்று போராட வேண்டும். அப்படி செல்லும்போது கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் அரசின் பின்னால் அணிவகுப்பார்கள் என்றார். மாநில அரசு மீது யுத்தம் தொடுக்கும் பாஜக! “துணைவேந்தர் நியமனங்கள் என்பவை, மாநில அரசின் நிர்வாகங் களால் மேற்கொள்ள வேண்டிய தாகும். இதில் தேவையில்லாமல் நான்காவதாக ஒருவரை அதுவும், கற்றல் அனுபவம் இல்லாத ஒருவரை நியமனம் செய்யலாம் என்பது இட ஒதுக்கீடு நடைமுறைக்கு எதிரானது. யுஜிசி தற்போது வெளியிட்டி ருக்கும் வரைவு அறிக்கை மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசின் கல்வி உரிமையில் ஒன்றிய பாஜக அரசு ஒரு யுத்தத்தை தொடுத்திருக்கிறது. ஏற்கெனவே, நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்த போதும் ஆதரித்துள்ளோம். எனவே, முதல்வர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்தையும் நாங்கள் ஆத ரிக்கிறோம்” என்று அதிமுக உறுப்பி னர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
உரிமைகளைப் பறிக்க அனுமதியோம்
“பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மாநில அர சின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை தான். எனவே, துணை வேந்தரை மாநில அரசு தான் நியமனம் செய்ய வேண்டும். மாநில அரசின் கட்டுப் பாட்டில் தான் இதற்கான அதிகாரம் இருக்க வேண்டும். ஆளுநர் தலையீடு தேவையில்லை. அப்போதுதான் மாநில அரசின் உரிமைகள் பாது காக்கப்படும். எனவே, யுஜிசி வரைவு அறிக்கையை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்” என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
பாசிச பாஜகவின் அடக்குமுறை
துணைவேந்தரை நியமனம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று கூறியிருக்கும் வரைவு அறிக்கை பாஜக அரசின் சதித் திட்டங்களில் ஒன்று என்றும் பாஜக காலூன்ற முடியாத மாநிலங்களை எப் படியாவது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் முயற்சிப்பது பாசிசத்தின் உச்சம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கூறினார். மாநில அரசுக்கு பேராபத்து “யுஜிசி-யின் வரைவு விதிமுறைகள், மாநில அரசின் அதிகாரத்தை, உரிமை களை பறிக்கும் ஒன்றிய அரசின் அடக்குமுறை” என்றார் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி. “தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக கொண்டு வரும் திட்டம் தான் யுஜிசியின் வரைவு அறிக்கை. இதை அனுமதித்துவிட்டால் ஒட்டு மொத்தமாக நமது மாநிலத்தின் கல்வி கொள்கையை அது சிதைத்து விடும். இதை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போராடவில்லை என்றால், அது அடுத்து தலைமுறையை தற்குறிகளாக மாற்றிவிடும்” என்றும் எச்சரிக்கை செய்தார். யார் கைகளில் பல்கலைக்கழகம்? துணைவேந்தரை ஆளுநர் மட்டுமே நியமிக்க முடியும். மாநில அரசும் முதலமைச்சரும் தலையிட முடியாது என்று கூறுவது மிகப்பெரிய ஆபத்து என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டால் இந்துத்துவ வாதிகளை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமனம் செய்து விடுவார்கள் என்றார் விசிக உறுப்பினர் முகமது ஷாநவாஸ். “மாற்றம் என்பது அனைத்திற்கும் உட்பட்டதுதான். ஆனால், அந்த மாற்றம் எதற்கு? யாருக்கானது? என்பது மிக மிக முக்கியமாகும். மாற்ற த்தை உள்வாங்கிக் கொண்டு முற் போக்காக சிந்திக்க வேண்டும். முற்போக்கு சித்தாந்தத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்வி எங்கள் உயிர்நாடி. அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்” என்றும் ஷாநவாஸ் குறிப்பிட்டார். முன்னதாக திமுக சார்பில் உயர்கல்வித் த்துறை அமைச்சர் கோவி.செழியன், எழிலரசன் ஆகியோர் பேசினர்.