states

ஜனநாயகப் பாதையில் நேபாளத்தைக் கொண்டுசெல்ல வழிகாட்டிய ராஜீய நிபுணர் - கணேஷ்

ஏப்ரல் 27, 2006. நேபாள நாடாளுமன்றத்திற்குள் சீத்தாராம் யெச்சூரி நுழைகிறார். அவரது வருகையை அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் உரக்க அறிவிக்கிறார்.  அவையே குலுங்குகிறது. அங்கு அமர்ந்தி ருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவரைக் கைதட்டி வரவேற்கிறார்கள். அவருடன் தேசியவாத காங்கிரசின் தலைவரான டி.பி.திரிபாதியும் இருக்கிறார். நேபாளத்தில் ஜனநாயகம் கொண்டு வரப்பட வேண்டுமென்று நீண்ட நெடிய போராட்டம் நடைபெற்று வந்தது. இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவு மற்றும் பங்கேற்பு தொடர்ந்து இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் முன்முயற்சியில் இந்திய அரசியல் தலைவர்கள் குழு ஒன்று தடை செய்யப்பட்டிருந்த நேபாள அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்றது. நேபாளக் காங்கிரசின் பெரும் தலைவர்களில் ஒருவரான கணேஷ்மான் சிங் இல்லத்தில் அந்தக் கூட்டம் நடந்தது. அப்போது நடந்த மாநாட்டிலும் இந்தக்குழுவினரில் சிலர் பங்கேற்றார்கள். சந்திரசேகரும், நேபாளக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.பி.கொய்ராலாவும் கல்வி பயிலும் காலங்களில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருந்தனர். 1990ல் சந்திப்புகள் நிகழ்ந்ததால் நேபாள மக்கள் மத்தியில் சந்திரசேகர் மற்றும் பனாரஸ் பல்கலைக்கழகம் ஆகிய பெயர்கள் பேசுபொருளாக மாறின. இந்த இருவரின் நட்பு ஜனநாயகப் பாதைக்கான கதவு என்று நேபாள மக்கள் கருதினர். 1990ல் ஜனநாயகத்திற்கு நேபாளம் திரும்பி விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால், உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதே அந்நாட்டு மக்களின் கருத்தாக  இருந்தது. அரசியல் கட்சிகளின் ஆட்சி என்று மாறிய போதும், மன்னர் பீரேந்திராவின் அதிகாரத்திற்கு உட்பட்ட “ஜனநாயகமாகவே” அது இருந்தது. ஆட்சியில் அமர்ந்த அரசியல் கட்சியினர் பொம்மைகளைப் போல மன்னரால் ஆட்டுவிக்கப்பட்டனர். 

நம்பிக்கை ஏற்படுத்திய மாற்றம்

2000க்குப் பிறகு சந்திரசேகர் என்ற பெயருக்குப் பதிலாக சீத்தாராம் யெச்சூரி மற்றும் பனாரஸ் பல்கலைக்கழகம் என்பதற்குப் பதிலாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் என்றும் மாறியது. நேபாளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாபுராம் பட்டாராயை(2011ல் இவர் நேபாளப் பிரதமராக பொறுப்பேற்றார்) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பின்போது யெச்சூரி சந்தித்திருந்தார்.  பாபுராம் பட்டாராய் உள்ளிட்ட மாவோயிஸ்ட் அமைப்புத் தலைவர்களோடு இணக்கமான பேச்சுவார்த்தையை அன்று நடத்தக்கூடியவராக சீத்தாராம் யெச்சூரி இருந்தார். அவரது பங்களிப்பை நேபாளத்தின் இடதுசாரித் தலைவர்கள் மட்டுமல்ல, நேபாளக் காங்கிரசின் தலைவர்களும் அங்கீகரித்தனர். அதன் அடையாளம்தான் அவர் நேபாள நாடாளுமன்றத்திற்குள் நுழைகையில் அனைத்துத் தரப்பினரும் அவரை வரவேற்றுக் கைதட்டிய காட்சி. அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த யெச்சூரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது முழுக்க, முழுக்க நேபாள மக்களின் வெற்றியாகும். பெரிய அண்ணன் தோரணையில்தான் இந்தியா அடிக்கடி பார்க்கப்பட்டது. இந்தியாவும், நேபாளமும் சகோதரர்கள்தான். ஆனால் அவர்கள் இரட்டையர்கள். ஒருவருடைய வேதனை மற்றொருவரிடம் பிரதிபலிக்கிறது. ஒருவரின் வெற்றி மற்றொருவரால் கொண்டாடப்படுகிறது“ என்றார். இடதுசாரித் தலைவர்களோடு யெச்சூரி பேச்சு நடத்திக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தேசியவாத காங்கிரசின் தலைவரான டி.பி.திரிபாதி, நேபாள காங்கிரஸ் தலைவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், நேபாளத்தில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த இருவரிடமும் பேசினார். யெச்சூரியின் முனைப்பால் உருவானதுதான் நேபாளத்தில் 12 அம்ச உடன்பாடு. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது.  நேபாளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டு களுக்கும் இடையில் இந்த உடன்பாடு நவம்பர் 22, 2005ல் கையெழுத்தானது. 

‘மக்கள் ஃபார்முலா’

அப்போது ஊடகங்களில் இது “யெச்சூரி ஃபார்முலா” என்று வர்ணிக்கப்பட்டது. அது குறித்து அவரிடமே வினா எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது மாதிரி முத்திரை குத்துவதை நான் எதிர்க்கிறேன். இது நேபாளத்தின் ஃபார்முலா. இதைத்தான் நேபாள அரசியல் கட்சிகள் விரும்பின. கரன் சிங்கின் முயற்சிக்குப் படுதோல்வி கிடைத்ததால் என்னுடைய பெயர் இந்தப் பணியோடு இணைத்துப் பேசப்பட்டது. நேபாளத்தினர் என்ன விரும்பினார்களோ அதை நான் சொன்னேன்” என்று விளக்கினார். மாவோயிஸ்டுகள் பிடிவாதமாக சில அம்சங்களை முன்வைக்கிறார்களே என்று கேட்டபோது, “மாவோயிஸ்டுகள் மிகத்தெளிவாகச் சொல்கிறார்கள். அரசியல் சட்டஅவை குறித்து நேபாள மக்கள் இரண்டு முறை ஏமாற்றப்பட்டார்கள். முதலில் 1951 மற்றும் இரண்டாவது முறை 1990 என்று இரண்டு முறையும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது மீண்டும் நிகழ்வதை அவர்கள் விரும்பவில்லை. நேபாளத்தின் புதிய ஜனநாயகப் பரிமாணம் என்பதற்குள் நுழைய இது ஒரு நியாயமான முன்நிபந்தனையாகவே இருக்கிறது” என்று அவர்களின் நிலைபாட்டிற்கு யெச்சூரி ஆதரவு தெரிவித்துப் பேசினார். நேபாள அனுபவத்தில் இருந்து இந்தியாவில் உள்ள அதிதீவிர இடதுசாரிகளும் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது என்று யெச்சூரி அப்போது முன்வைத்தார்.  யெச்சூரியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய், “இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையில் நட்புறவை வளர்த்தெடுப்பதில் மிகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை சீத்தாராம் யெச்சூரி எப்போதுமே செய்து வந்தார்” என்று பொருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.