states

img

இந்திய ஒலிம்பிக் வீரர்களின் பெயர்கள் சாலை, பள்ளிகளுக்கு சூட்டப்படும்.... பஞ்சாப் அரசு அறிவிப்பு...

சண்டிகர்:
ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஒலிம்பி்க்கில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்தியஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. 

இந்நிலையில் பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர்களை கௌரவப்படுத்தும்  வகையில் பஞ்சாப்பில் உள்ள சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற  வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை-பொதுப்பணித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா  அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த வீரர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் முயற்சியைப் பாராட்டும் சிறு அடையாளமாக வீரர்களின் பெயர்கள், பஞ்சாப்பில் உள்ள சாலை, பள்ளிகளுக்குச் சூட்டப்படும். இதற்கான ஒப்புதலை முதல்வர் அம்ரீந்தர் சிங் வழங்கியுள்ளார். விரைவில் இதுதொடர்பான பணிகளைத் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார். பதக்கம்பெற்ற வீரர்களின் குடியிருப்புப் பகுதியை இணைக்கும் சாலைகளுக்கும், அருகில் உள்ள பள்ளிகளுக்கும் அவர்களின் பெயர்சூட்டப்படும். இது வருங்காலத் தலைமுறையினை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்.ஒருகாலத்தில் இந்திய விளையாட்டுத் துறையில் பஞ்சாப்பின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த ஒலிம்பிக்கில் பஞ்சாப்சார்பில் 20 விளையாட்டு வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஆண்கள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் குழுவில் 11 பேர் பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.