ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 289-ஆக உயர்ந்துள்ளதாக கட்டாகின் எஸ்சிபி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் மொத்தம் உயிரிழப்பு 288 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்த பிஜய் பஸ்வான் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட நிலையில், காயங்களுடன் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த பஸ்வானுக்கு திங்கள்கிழமை இரவு உயர் ரத்த அழுத்தம் அதிகமானது. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, சிகிச்சை பலனின்றி ஜூன் 13 (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்தார்.
இதையடுத்து, ஒடிசா ரயில் விபத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 289 ஆக உயர்ந்துள்ளது.