விவசாயிகளின் ஒற்றுமையைப் பிளவுபடுத்த, மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் இழிமுயற்சிகள் தோல்வியுறும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்தார்கள்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, தலைவர் அசோக் தாவ்லே, நிதிச் செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் மற்றும் நிர்வாகிகள் பாதல் சரோஜ், விக்ரம் சிங் முதலானவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, நாட்டில் விவசாய வர்க்கத்தினரின் ஒற்றுமை வளர்ந்துகொண்டிருக்கிறது. இது நடைபெற்றுவரும் விவசாய போராட்டங்களில் மேலும் உறுதிப்படும். இந்த ஒற்றுமை, மோடி அரசாங்கம், விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ள ஒற்றுமையை உடைத்திட மேற்கொண்டுவரும் இழிமுயற்சிகளை முறியடித்திடும். விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக “சில காகித அளவிலான விவசாய சங்கங்களை” அரசாங்கம் உயர்த்திப்பிடித்து, நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்ற மேற்கொண்டுள்ள முயற்சிகள், நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகளின் பங்கேற்பு மூலம் முறியடிக்கப்படும். மத்திய அரசாங்கம், நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், இப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கும் பல்வேறு விதங்களில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. எனினும் இவை அனைத்தும் மக்கள் மத்தியில் எடுபடாமல் வீணாகிவிட்டன.
அதிகரித்துவரும் விவசாய வர்க்கங்களின் ஒற்றுமை நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் தெள்ளத்தெளிவாகியிருக்கிறது. நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக விளைந்துள்ள விவசாய நெருக்கடியின் விளைவாக கடன்வலைக்குள் சிக்கி சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாய வர்க்கத்தினர் ஒருங்கிணைந்திருப்பதற்கு இதுவொரு முக்கிய காரணமாகும். கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை மீறுவதுடன், பெரு முதலாளிகளுக்கும், பணக்கார விவசாயிகள் மற்றும் முதலாளித்துவ விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் இடையேயான முரண்பாடுகளையும் உக்கிரப்படுத்தி இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுக்களிடையேயும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் நாட்டிலுள்ள மாநிலக் கட்சிகள் பாஜக-விடமிருந்துவந்த பிணைப்பை முறித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு உருவாகியுள்ள நடைமுறை, பாஜக-வை அரசியலில் தனிமைப்படுத்தி இருக்கிறது. இதனை டிசம்பர் 8 அன்று நடைபெற்ற பாரத் பந்த் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்றிருப்பதிலிருந்து பார்க்க முடிந்தது.
அரசியல் அரங்கில் மற்றுமொரு முக்கியமான அம்சம், நாட்டின் மிகவும் பிரதான வர்க்கங்களாக விளங்குகின்ற, தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒற்றுமையாகும்.
2020 செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மிகவும் மோசமான முறையில் மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதுடன், தொழிலாளர் நலச் சட்டங்களையும், தொழிலாளர் விரோத சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாக நிறைவேற்றியது. இவை, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டு நின்று போராடுவதற்குக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த நாளன்று, விவசாயிகளின் அகில இந்திய போராட்டமும் மகத்தான அளவில் வெற்றி பெற்றிருப்பதிலிருந்து தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
நடைபெற்று வரும் போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்கள் பங்கேற்பதை, உலக அளவில் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் மதிப்பிட வேண்டியது தேவை. பன்னாட்டு கார்ப்பரேட் சக்திகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, அடிப்படையாகவுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை மறுப்பதன் மூலமும், அவர்களுக்கு கண்ணியமிக்க வாழ்க்கைக்கான ஊதியத்தை அளிக்க மறுப்பதன் மூலமும் சரிசெய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நடைபெற்றுவரும் போராட்டம், அம்பானி-அதானி உற்பத்தி மற்றும் சேவைகளைப் பகிஷ்கரிப்போம் என்ற முழக்கத்துடன் கார்ப்பரேட் சக்திகளுக்கு எதிராக சரியான திசைவழியில் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
போராட்டத்திற்குத் தீர்வு காணவோ, கவுரவப் பிரச்சனையாகக் கருதிக்கொண்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்யவோ பிரதமர் முன்வராத நிலைப்பாட்டினை மேற்கொண்டிருப்பது, வரவிருக்கும் காலங்களில் மேலும் மேலும் அதிகமான அளவில் போராட்டத்தில் மக்கள் பங்கேற்பதற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. கடும் குளிரில் இரவும் பகலும் பல லட்சக்கணக்கான விவசாயிகள் உட்கார்ந்திருக்கின்ற போதிலும், அப்போராட்டத்தைத் தீர்த்துவைத்திடத் திராணியற்றிருக்கிற காரணத்தால், கார்ப்பரேட்டுகளின் கிடிக்கிப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிற ஒரு பலவீனமான நிர்வாகியாகவே மோடியைக் கருத வைத்திருக்கிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம், மோடி அரசாங்கம் தன் பிடிவாதமான நிலைப்பாட்டைக் கைவிட்டு, இந்திய ஜனநாயக அரசாங்கப் பாரம்பர்யத்தின் அடிப்படையில், போராட்டத்தில் முன்வைத்துள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திட முன்வர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.