சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த டிசம்பர் 26 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நவ.16 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களை அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பம்பை, நிலக்கல், எரிமேலி மற்றும் பீர்மேடு ஆகிய இடங்களில் சாமி தரிசனத்துக்கு பதிவு செய்துகொள்ளலாம் எனவும், இதனால் தினசரி ஆன்லைன் முன்பதிவு 80,000 எண்ணிக்கையில் இருந்து 70,000 ஆகக் குறைக்கப்படுவதாக தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசன் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு வரும் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் ஸ்பாட் புக்கிங் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.