ஆர்எஸ்எஸ் முகாமில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்த கேரளத்தை சேர்ந்த ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வஞ்சிமலையை சேர்ந்த ஐடி ஊழியரான ஆனந்து அஜி (26), கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், ஆனந்து அஜியின் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில், ஆனந்து அஜி இறந்த பிறகு, அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் (Scheduled post) 7 பக்கங்களுடைய கடிதம் ஒன்று வெளியானது. அதில், தான் சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், "ஆர்.எஸ்.எஸ் முகாமிலும் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஆர்.எஸ்.எஸ்-இல் உள்ள எவருடனும் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். விஷமிகள் நிறைந்த இடம் ஆர்.எஸ்.எஸ். அவர்கள் துஷ்பிரயோகம் செய்பவர்கள். அவர்கள் தங்கள் முகாம்களில் பலரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அவர்களின் முகாம்களில், துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது" என ஆனந்து அஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கேரள மாநில செயலாளர் வி.கே.சனோஜ் கூறுகையில், "ஆனந்துவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஆர்.எஸ்.எஸ்-இன் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.