பட்டுக்கோட்டைக்கு பாட்டுக்கட்டிய ஜீவி
“நான் பாப்புனையப் பழகியதே பட்டுக்கோட்டை வரலாற்றை எழுதத்தான் என இப்போது நான் இறுமாப்புக்கொள்கிறேன்.”
மக்கள் கவிஞரின் வரலாறை கவிதையால் புனையத்தொடங்கும் முன்னே கவிஞர் ஜீவி இவ்வாறு பெருமிதம் கொள்கின்றார். இந்து தமிழ்திசை பட்டுக்கோட்டைக்கும், ஜீவிக்கும் உள்ள தொடர்பை இப்படிச் சொல்கிறது. மக்கள் கவிஞர் விவசாயிகளை சங்கமாக இயங்க வைத்தார். ஜீவி பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பொறுப்பு வகித்தார். மாடமாளிகைகளில் முழங்கிக் கொண்டி ருந்த தமிழ்க் கவிதையை பாட்டாளிகளின் வீடுகளுக்குள் புழங்கிடச் செய்தவர் மக்கள் கவிஞர். அதனாலேயே சாமானியனுக்கும் புரியும் வடிவத்தில் பட்டுக்கோட்டையின் சரிதத்தை சாதித்துக் காட்டியிருக்கிறார் ஜீவி. “வெற்றிலையும் வாயும் விளையாடும் வேளையிலே நெற்றியிலே சிந்தை நிழலோடி நின்றிருக்கும். கவிதை மிதக்கும் கண்கள் சாட்டை போலத் தோளில் தொங்கும் துண்டு” இப்படி மக்கள் கவிஞனை கவியரசு கண்ண தாசனின் கவிதைக் கேமிரா படம் பிடிக்கிறது என ஜீவி கவியரசரை துணைக்கழைக்கிறார் பட்டுக்கோட்டையின் புகழ்க்கொடி பிடிப்பதற்கு. பட்டுக்கோட்டையின் முதல் கவிதைப் பிரசவம் நிகழ்ந்ததை இப்படி நெகிழ்ந்து சொல்கிறார் ஜீவி. காதல் கவிதைகள் தான் கவிஞர்களின் முதல் பிரசவம் என்று நம்பியிருந்த இலக்கிய உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தான் சமூக உணர்வுகொண்ட ஒரு கவிஞனாய் ஜனித்தான். முதல் கவிதையிலேயே முத்திரை பதித்தான் - என நயம்படப் பாடுகிறார் ஜீவி. உருவம் உள்ளடக்கம் உத்தி என வார்த்தை களுக்காக மல்லுக்கட்டாமல் எளிய வார்த்தைகளால் கவிதை வார்த்தெடுக்கிறார் கவிஞர் ஜீவி. கவிதைகளால் பாமாலை கோர்த்துக் கொடுக்கிறார் ஜீவி. திண்டுக்கல்லில் பட்டுக்கோட்டை நடித்த நாடகம், கான்ஸ்டபிள் வேடத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஒரு விவசாயியை அடித்துக் கைது செய்யும் காட்சி.கவிஞரோ தடியை கீழேபோட்டுவிட்டு விவசாயியின் மேல் கை வைத்துத் தள்ளினார். தரையில் மட்டுமல்ல திரையிலும் சக தொழிலாளியை என்னால் தாக்க முடியாது என்கிறார் கவிஞர். அந்த சம்பவத்தை அழகியலோடு சொல்கிறார் ஜீவி. இப்படி. “வேர்வை மனிதர்கள் மீது எப்போதும் பன்னீர் தெளித்தே பழகிய பட்டுக்கோட்டை நடிப்புக்குக்கூட உழைப்பவரை அடிக்க விரும்பவில்லை.” “வஞ்சிப்பா பாடிய கவிஞர்களுக்கு மத்தியில் ஏழைகளை வஞ்சிப்போர் பற்றிப் பாடியவன் பட்டுக்கோட்டை” என்று மக்கள் கவிஞரின் பாட்டாளிவர்க்கச் சிந்தனையை கவியால் வடிக்கிறார் ஜீவி. அதனால்தான் பட்டுக்கோட்டைக்குப் பிறகுதான் டைட்டிலில் கொட்டை எழுத்தில் பாடலாசிரியர் பெயரும் வந்தது என்கிற செய்தியையும் அறந்தை நாராயணன் வழி ஆய்ந்து சொல்கிறார் கவிஞர் ஜீ வி. “ஏழைகளின் இதயக்கனி எம்.ஜி.ஆர். நாடோடி மன்னனில் நம் மக்கள் கவிஞருக்கு வாய்ப்பளித்தார். “காடுவெளெஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்.” இந்த வரிகளில் மயங்கிய எம்.ஜி.ஆர். பாட்டுக்குச் சன்மானத்தை ஆயிரமாக உயர்த்தினார். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எம்.ஜி.ஆரிடம் உங்கள் கொள்கைகளைச் சொல்லுங்கள் என பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது பட்டுக்கோட்டையின் பாடல்களே எனது கொள்கைகள் என்றாராம். “மேகத்துக்குள் மறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல பட்டுக்கோட்டையின் கீதத்துக்குள் மறைந்து கிடக்கின்றன வாழ்வியல் சொற்சித்திரங்கள்” என பட்டுக்கோட்டையின் பாட்டுவரிகளைக் குறிப்பிடுகிறார் ஜீவி. இப்படி “பட்டுக்கோட்டை தமிழின் பாட்டுக்கோட்டை” என மக்கள் கவிஞரின் வாழ்வியல் அனுபவங்களை தன் அழகிய கவி வடிவத்தால் தொட்டுக்காட்டியிருக்கின்றார் ஜீவி. வாழ்க்கை வரலாற்றை கவிதையாய் வடிப்பதில் ஜெயித்தும் காட்டியிருக்கிறார் கவிஞர் ஜீவி. இன்றைய இளைஞர்கள் பட்டுக்கோட்டையின் வரலாறை பக்கம் பக்கமாக படிக்க சிரமப்படவேண்டியதில்லை. ஜீவியின் கவிதைப் பக்கம் வாருங்கள். தமிழில் பாட்டுக்கோட்டை வரலாறை அழகிய கவிதை வடிவில் அருந்துங்கள்