சமத்துவ தமிழ்நாடு! சமர் புரியும் வரலாறு!
கணிக்க முடியாத வேகமும், சிதைக்க முடியாத நெஞ்ச முமே இளமையின் அடையா ளம். உலக முதலாளித்துவம் சோசலிசத்தின் மீதான அவநம்பிக்கையை விதைக்க முய லும் அதே நேரத்தில், அதன் அடித்தளத் தையே அசைக்கும் எழுச்சிகள் உலகெங் கும் உருவாகி வருகின்றன. கடந்த பத்தாண்டு களில் ஆப்பிரிக்கா துவங்கி இலங்கை வரை முதலாளித்துவம் எதிர்பாராத இளைஞர் எழுச்சிகள் வெடித்துள்ளன. ‘அரசியலற்ற இளைஞர்’ என்ற கட்டுக்கதை உலகெங்கிலும் இளைஞர் எழுச்சிகள் நடைபெறும் காலத்தில், இந்தியாவில் “அரசி யலற்ற இளைஞர்கள்” என்ற ஆளும் வர்க்க கருத்தாக்கம் மிகவும் ஆபத்தானதாக மாறி யுள்ளது. கார்ப்பரேட் ஊடகங்களும் அர சியல் வல்லுநர்களும் இளைஞர்கள் இப்ப டித்தான் இருக்கிறார்கள் என்ற கருத்தை திணிக்கும் நேரத்தில், வலுவான அரசியல் மாற்றத்தை பேசக்கூடியவர்களாக இளை ஞர்கள் தங்களை வரலாறு முழுக்க நிரூபித்து வருகின்றனர். இலக்கியங்கள் துவங்கி போராட்டங்கள் வரை, கடந்த காலம் துவங்கி நிகழ்காலம் வரை அதற்கு எண்ணற்ற உதா ரணங்களை சொல்ல முடியும். சமத்துவத்தின் வைரவாக்கியம் இந்தக் காலத்தில் வலுவான மாற்றுக் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் பேச வேண்டிய கட்டாயம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கைகளில் வந்து சேர்ந்துள்ளது. வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநாட்டின் முழக்கமான “சமத்துவ தமிழ்நாடு - சமர் புரியும் வரலாறு” என்பது தமிழ் மண்ணின் வரலாறு உருவாக்கித் தந்த வைரவாக்கியம். தமிழ்நிலம் என்பது வெறும் புவியியல் எல்லை அல்ல; அது ஒரு கருத்தியல் களம். சங்க காலம் தொட்டே இந்த மண்ணில் பிறந்த இலக்கியங்கள் சமத்துவத்தைப் பேசின. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார் பாடியபோது, அது உலகளாவிய மனிதநேயத்தின் முதல் பிரகடனங்களில் ஒன்று. புறநானூறும் அகநானூறும் பேசிய அகவயப்பாடல் சாதியோ மதமோ இல்லாத ஒரு சமூகக் கனவின் இலக்கிய வெளிப்பாடு. தொடரும் போராட்ட வரலாறு வர்ணாசிரம ‘தர்மம்’ என்ற பெயரில் மனி தர்களை உயர்வு தாழ்வு என பிரிக்க முயன்ற னர். ஆனால் தமிழ்நிலம் அடங்கவில்லை. சித்தர்கள் எழுந்தனர். “சாதி சாதியென்று சொல்லல் பாவம், சாதி தவிர்த்து நடத்தல் தருமம்” என்று பட்டினத்தார் பாடினார். திருக்குறளோ, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குரலை முழக்கியது. தமிழ் மண்ணின் வரலாறு என்பது ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடர்கதை. காலனிய காலத்தில் இந்த போராட்டம் புதிய வடிவம் எடுத்தது. 1938ல் தந்தை பெரி யார் ஆரம்பித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெறும் மொழிப் போராட்டம் அல்ல; ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி. இந்தித் திணிப்புக்கு எதிராக உயிரை தியாகம் செய்த வரலாறு தமிழ்நிலத்தின் சுயமரியாதை உணர்வின் வெளிப்பாடு. வாலிபர் சங்கத்தின் போராட்டம் கிளந்தெழும் அத்தகைய போராட்டத்தின் நவீன வடிவமாய் வாலிபர் சங்கத்தின் வரலாறு மாறியிருக்கிறது. மொழி துவங்கி எல்லா வகை யிலான ஆதிக்கத்தையும் திணிக்கும் சிந்த னைக்கு எதிரான வாள்முனையாக வாலிபர் சங்கம் மாறியிருக்கிறது. சாதி, மதம், மொழி, பாலினம், உழைப்பு, உடமை என அனைத்து வகையிலான ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை கட்டமைக்கும் ஆயுதமாக “சமத்துவத் தமிழ்நாடு; சமர்புரியும் வரலாறு” என்னும் முழக்கம் நிற்கிறது. தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் நிகழும் சாதிய வன்கொடுமைகளுக்கும், காதலின் கழுத்தை அறுக்கத் துடிக்கும் சாதி யக் கோரங்களுக்கும், பிற்போக்குவாத வலது சாரி அரசியலின் வளர்ச்சிக்கும் எதிரான உத்திகளுக்கு அடித்தளமிடும் முழக்கமாக மாநாட்டு முழக்கம் மாறியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டை தலித் மக்களுக்கும் பெண்களுக்கும் எதி ரான வன்கொடுமைகள் நிறைந்த மாநில மாக, உழைப்புச் சுரண்டலின் அதிகரிக்கும் மாநிலமாக மாற்ற நினைக்கும் நுண் அர சியலுக்கு எதிராய் நின்று களத்தில் கருத்தி யல் வாள் சுழற்றும் அமைப்பாக வாலிபர் சங்கம் செயல்படுகிறது. கூட்டாட்சி உரிமைகள், மாநில நலன், பண்பாட்டுத் தாக்குதல், மொழி அசமத்துவம் என நீளும் துரோகங்களுக்கு எதிரான நீடித்த போராட்டங்களை வரலாற்றில் இருந்து கற்று வரலாற்றை உருவாக்கத் துடிக்கும் இளை ஞர்களின் மாநாடாக இம்மாநாடு நடை பெறுகிறது. கீழடி கண்டெடுத்த வரலாற்றுத் தொன்மை இத்தேசத்தின் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று அரசியலாய் மாறியிருக்கிறது. வேத நாகரிகமே இந்திய நாகரிகம் என நிறுவத் துடிக்கும் ஒற்றைக் கலாச்சார இந்துத்துவ அரசியலுக்கு எதிராக, வரலாற்றின் திசை காட்டும் கீழடியின் களம் உணர்த்தும் சமத்துவச் சிந்தனையின் களமாய் தமிழ்நாட்டை மாற்றும் அரசியல் பேசப்பட வேண்டியது காலத்தின் தேவை. புதிய தலைமுறை இளைஞர்களின் (Gen Z) அரசியல் எழுச்சி 1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்த புதிய தலைமுறை இளைஞர்கள் (Gen Z) தமிழ்நாட்டின் சமகாலச் சூழலில், மிகவும் இணையத் தெளிவுள்ள, சமூக விழிப் புணர்வுள்ள, அரசியல் ஆற்றல்மிக்க பகுதி யினராக உள்ளனர். தமிழ்நாட்டின் புதிய தலைமுறை இளைஞர்கள் ஏறக்குறைய 80 லட்சம் பேர். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த இளைஞர் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம். வேகமான தொழில்நுட்ப மாற்றம், பொரு ளாதார மாற்றம், அரசியல் போட்டிகள் நிறைந்த ஒரு சகாப்தத்தில் வளர்ந்த இந்த தலைமுறை, பரவலான இணையம் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் மூலம் எந்த முந்தைய தலைமுறையையும் விட உலக ளாவிய கதைகளுடன் - தகவல்களுடன் அதிக தொடர்பு கொண்டுள்ளது. டிஜிட்டல் சமூக வலைத்தளங்கள் அவர்களின் அரசியல் உணர்வு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. 2024இல் வளர்ச்சி ஆய்வு மையம் மற்றும் லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கணக்கெடுப்புகளின்படி, தமிழ்நாட்டில் சுமார் 89 சதவீத இளைஞர்கள் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் பெருமிதத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த கலாச்சார உணர்வு சக்திவாய்ந்த அரசியல் அடிநீரோட்டமாக வெளிப்படுகிறது. இது நீண்ட காலமாக பிராந்திய மொழி உரிமைகள், சமூக நீதி, தமிழ் அடை யாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக உணரப்படும் திணிப்புகளுக்கு எதிர்ப்பை முன் வைத்த திராவிட மரபுடன் அவர்களை இணைக்கிறது. மதச்சார்பின்மை, சமத்துவச் சிந்தனை கள் ஆகியவையும், மொழிசார்ந்த பெருமை யுடன் இணைந்து கொள்கிறது. இந்த புதிய தலைமுறையினரை, அவர்களது கல்வி முதல் வேலைவாய்ப்பு வரையிலான வாழ்வா தார பிரச்சனைகளில் அவர்களின் அடிப்ப டையான கருத்தும், இத்துடன் பிணைந்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் புதிய தலைமுறை இளை ஞர்கள் அரசியல் உரையாடலில் ஆழமாக ஈடுபட்டிருந்தாலும், வழக்கமான அரசியல் கட்சிகள் மீது பரவலான சந்தேகம் கொண்ட வர்களாக உள்ளனர். சுமார் 72 சதவீதம் பேர் பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகளில் நம்பிக்கையின்மையைக் கொண்டுள்ளனர். அவற்றை ஊழல் நிறைந்த, பயனற்ற அல்லது இளைஞர் முன்னுரிமைகளுக்கு எதிரானவை என்று பார்க்கின்றனர். இது அவர்களது இணையவழிச் செயல்பாட்டு தளங்களுக்கான விருப்பத்தைத் தூண்டு கிறது. இந்த தலைமுறையின் அரசியல் ஈடு பாடு பெரும்பாலும் சமூகத்தில் மேலெழும்பு கிற பிரச்சனைகளில் மட்டுமே அணிதிரட்டல் களை மையமாகக் கொண்டுள்ளது. மீடியா அண்ட் டெமாக்ரசி ரிசர்ச் குரூப் 2024 நடத்திய டிஜிட்டல் பயன்பாட்டு கணக் கெடுப்புகளின்படி, தமிழ்நாட்டின் புதிய தலைமுறை இளைஞர்களில் 82 சதவீதம் பேர் அரசியல் தகவல்களுக்கு சமூக ஊடகங் களை நம்பியுள்ளனர். ஹேஷ்டேக் பிரச்சா ரங்கள் மற்றும் ஆன்லைன் மனுக்களில் குறிப்பிடத்தக்க பங்கேற்பை மேற்கொள் கின்றனர். பாரம்பரிய ஊடகங்களைவிட சமூக வலைத்தளங்களை அதிகம் நம்புவது அவர்களின் தகவல் நுகர்வு முறையில் அடிப்படை மாற்றத்தை காட்டுகிறது. புதிய தலைமுறை இளைஞர்களில் சுமார் 67 சதவீதம் பேர் சாதி எதிர்ப்பு கொள்கை களை ஆதரிக்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், இளைஞர் செயல்பாடு இலக்கி யம், கலை மற்றும் அரசியலில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட குரல்களை அதிகளவில் எதி ரொலிக்கிறது. பாரம்பரிய அரசியல் இயக்கங்களுக்கு அப்பால் அடக்குமுறை எதிர்ப்பு இயக்கங்கள் அவர்களை ஈர்க்கும் அரசியலாக உள்ளது. உலகளாவிய போக்குகளை எதிரொ லிக்கும் வகையில், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி தமிழ்நாட்டின் புதிய தலைமுறை இளைஞர்களையும் ஈர்த்துள்ள முக்கிய பிரச்சனைகளாகும். சுமார் 79 சதவீதம் பேர் காலநிலை மாற்றத்தைப் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்து கின்றனர். அதை பொருளாதார பாதிப்பு மற்றும் பொது சுகாதாரத்துடன் இணைக் கின்றனர். தமிழ்நாட்டில் புதிய தலைமுறை இளைஞர்கள் முந்தைய தலைமுறைகளை விட பாலின சமத்துவம் மற்றும் பாலியல் சிறு பான்மையினரின் (LGBTQ+) உரிமைகளை அதிக தெளிவாக ஆதரிக்கின்றனர். ஆய்வு கள் 84 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாலின சமத்துவ முயற்சிகளை ஆதரிக்கின்ற னர் என்று தெரிவிக்கின்றன. பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களி லும், பெண்கள் உரிமைகளை வலியுறுத்தும் இயக்கங்களிலும் அவர்கள் முன்னணியில் நிற்கின்றனர். இந்த தலைமுறையின் உறுதியான தன்மை முற்போக்குப் பார்வை மற்றும் புதுமையான செயல்பாட்டு மாதிரிகள் சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக அவர்களை நிலைநிறுத்துகின்றன. இத்தகைய இளைய தலைமுறையினர், முழுமையான வர்க்க அரசியல் சிந்தனை களின் பால் ஈர்க்கப்பட்டு விடும் நிலையைத் தடுக்கவே, அவர்களை திசை திருப்பும் பலவிதமான உத்திகளை, பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் குறிப்பாக ஆர்எஸ்எஸ் - பாஜக மேற்கொண்டுள்ளன. அதைத் தடுத்து நிறுத்துவதும், சமத்துவத்தை நோக்கிய சமரில் அவர்களை அணிதிரளச் செய்வதுமே, வாலிபர் சங்க மாநாட்டின் அடிப்படைப் பணியாகும்!