திருவனந்தபுரம்:
கேரள நிதிநிலை அறிக்கை, தொற்று நோய்களின் போதும் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதாரத் துறைக்கு ஏராளமான ஆற்றலை நிதிநிலை அறிக்கையின் சுகாதார அவசரத் தொகுப்பு வழங்குகிறது. கோவிட் மூன்றாவது அலையை திறம்பட எதிர் கொள்வதற்கான எதிர்பார்ப்பு அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் அடங்கியுள்ளன. ஆறுஇனங்கள் கொண்ட நிகழ்ச்சி நிரலும் இதில் உள்ளது. இது சுகாதாரம் மற்றும் அதனுடன்தொடர்புடைய அமைப்புகளை உறுதிப்படுத்து வதற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
சுகாதார அவசரநிலைகளை சமாளிக்க இரண்டாவது கோவிட் தொகுப்பில் 2800 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வாங்குவதற்காக 1000 கோடி ரூபாயும், துணைஉபகரணங்கள் வாங்க 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார துணை மையங்கள், குடும்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதாரநிலையங்கள், சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த ஆண்டுக்கு 559 கோடிரூபாய் மானியத்துடன் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு சுகாதார அமைப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும். ஒவ்வொரு சிஎச்சி, தாலுகா, மாவட்ட மற்றும் பொது மருத்துவமனையிலும் தொற்று நோய்களுக்கு 10 படுக்கைகள் கொண்ட தனிமைவார்டுகளை அமைப்பதற்காக ரூ.636.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கண்டறியப்படும். அனைத்து தாலுகா, மாவட்ட மற்றும் பொதுமருத்துவமனைகளிலும் தற்போதுள்ள ஆட்டோகிளேவ் அறை சிஎஸ்எஸ்டி ஆக மாற்றப்படும். இந்த ஆண்டு 25 சிஎஸ்எஸ்டி-களை உருவாக்க ரூ.18.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்களைக் கையாள ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் தனித்தனி பிரிவு அமைக்கப் படும். முதல் கட்டமாக, இந்த ஆண்டு திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் பிரிவுகள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவிட் மூன்றாம் அலையை சுகாதாரவல்லுநர்கள் எதிர்நோக்கும் சூழ்நிலையில், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். இடவசதி கொண்ட மாவட்ட மருத்துவமனைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் குழந்தைகளுக்கான ஐசியு வார்டுகள் அமைக்கப்படும். இதன் ஆரம்ப கட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையான கோவிட் சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைப்பது மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். இதற்காக 150 மெட்ரிக் டன் திறன் கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் ஆலை அமைக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை மற்றும் திட்டத்தின் ஆரம்ப செலவு ஆகிய வற்றிற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மாதிரியில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும்.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதற்காக பிராந்திய சோதனை ஆய்வகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆரம்ப செலவுக்கு ரூ.10 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட வைராலஜி நிறுவனத்தில் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசி மேம்பாட்டுக்காக நிதி நிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் தலைமையில் சுகாதார அமைப்புகள் பலப்படுத்தப்படும். நடப்புநிதியாண்டில், பதினைந்தாம் நிதி ஆணையத்தால் கேரளாவுக்கு அனுமதிக்கப்பட்ட சுகாதார மானியத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.559 கோடி வழங்கப்படும். இந்த பணம் குடும்ப சுகாதார துணை மையங்கள், குடும்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த பயன்படுத்தப்படும். சுகாதார மானியத்துடன் மாநில அரசின் பங்கு மற்றும் உள்ளாட்சி பங்கை ஒருங்கிணைப்பதன் மூலம் சுகாதார நிறுவனங்களை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆயுஷ் துறைக்கும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், பிந்தைய கோவிட் சிகிச்சைக்குமான மருந்துகள் ஆயுஷ் துறைகள் மூலம் கிடைக்கும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.