சிவராஜ் பாட்டீல் காலமானார் குண்டுவெடிப்புக்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்
புதுதில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (91) வெள்ளியன்று காலை காலமானார். மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் வீட்டு பராமரிப்பில் இருந்த நிலையில், வெள்ளியன்று காலை 6:30 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1980ஆம் ஆண்டு லாத்தூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சிவராஜ் பாட்டீல், 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏழு முறை மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்திரா காந்தி அமைச்சரவையில், 1980-1982 வரை பாதுகாப்புத் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். 2004 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் உள்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாட்டிற்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை நவம்பர் 30, 2008 அன்று ராஜினாமா செய்தார். உள்துறை அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முன்பு, ஒன்றிய அமைச்சரவையின் பல முக்கிய பதவிகளில் பணியாற்றிய சிவராஜ் பாட்டீல் மும்பை குண்டுவெடிப்புத் தாக்கு தலுக்குப் பிறகு, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு களில் பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் செயல்பட்டார். குறிப்பாக 1991-1996 வரை மக்களவைத் தலைவராக (சபாநாயகராக) பணியாற்றினார். வாழ்வின் கடைசி நாட்களிலும் டிரெண்டிங் சமீபத்தில், தில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், மும்பை குண்டுவெடிப்பின் போது அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தனது பதவியைத் துறந்தார் என்றும் அவர் பெயரை பலரும் நினைவு கூர்ந்து, பாராட்டுத் தெரிவித்தனர். 35 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் பொது வாழ்வை கொண்ட சிவராஜ் பாட்டீல், தில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் மூலமாக வாழ்வின் கடைசி நாட்களிலும் கூட டிரெண்டிங் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
